ஜெ.குருவுக்கு கூடுதல் பாதுகாப்பு: ராமதாஸ் வேண்டுகோள்

ஜெ.குருவுக்கு கூடுதல் பாதுகாப்பு: ராமதாஸ் வேண்டுகோள்
Updated on
2 min read

பா.ம.க.வின் சட்டப்பேரவைக் கட்சித் தலைவர் ஜெ.குருவுக்கு வன்முறை கும்பல்களால் ஆபத்து ஏற்படக்கூடும் என்பதால் அவருக்கு காவல்துறை பாதுகாப்பு வழங்க வேண்டும் என அக்கட்சி நிறுவனர் ராமதாஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்: "வேலூர் மாவட்டம் ராணிப் பேட்டை காந்திசிலை அருகில் பாமக சட்டப்பேரவைக் கட்சித் தலைவரும், வன்னியர் சங்கத் தலைவருமான ஜெ.குரு கலந்து கொண்ட கூட்டத்தில் காவல்துறையினரும், விடுதலை சிறுத்தைகள் கட்சியினரும் கூட்டணி அமைத்துக் கொண்டு கொலைவெறி தாக்குதலை நடத்தியிருக்கின்றனர். பா.ம.க.வினர் மீது திட்டமிட்டு நடத்தப்பட்ட இந்தத் தாக்குதலுக்கு எனது கடுமையான கண்டனங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

மக்களவைத் தேர்தலையொட்டி அரசியல் லாபம் தேடும் நோக்கத்துடன் வன்முறையை தூண்ட விடுதலை சிறுத்தைகள் கட்சி முயல்வதாக ஏற்கனவே நான் குற்றஞ்சாற்றியிருக்கிறேன்.

பரப்புரையில் ஈடுபட்டுள்ள பாட்டாளி மக்கள் கட்சி வேட்பாளர்கள் மீது பல இடங்களில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் தாக்குதல் நடத்தியதை கடந்த 18.01.2014 அன்று வெளியிட்ட அறிக்கையில் நான் சுட்டிக் காட்டியிருந்தேன்.

இந்த சூழலில் தான் ஜெ.குரு கலந்துகொண்ட ராணிப்பேட்டை பா.ம.க. பொதுக் கூட்டத்தில், வன்முறை செய்வதையே வழக்கமாகக் கொண்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

பாட்டாளி மக்கள் கட்சிக்கு எதிரான இந்த வன்முறையை விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் திட்டமிட்டு கட்டவிழ்த்து விட்டுள்ளனர்.

கிருஷ்ணகிரியில் பேட்டியளித்த விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், தாழ்த்தப்பட்டோருக்கும் வன்னியர்களுக்கும் இடையே வன்முறையை தூண்ட பா.ம.க. திட்டமிடுவதாக அவதூறு குற்றச்சாற்றைக் கூறியிருந்தார். அடுத்த சில மணி நேரத்தில் ராணிப்பேட்டையில் இந்த தாக்குதலை விடுதலை சிறுத்தைகள் நடத்தியுள்ளனர்.

கடந்த ஏப்ரல் மாதம் மாமல்லபுரத்தில் நடந்த சித்திரை முழு நிலவு வன்னிய இளைஞர் பெருவிழாவுக்கு முன்பாக இதேபோன்ற அறிக்கையை திருமாவளவன் வெளியிட்ட சில மணி நேரங்களில் மரக்காணம் பகுதியில் மாமல்லபுரம் மாநாட்டுக்கு பாட்டாளி மக்கள் கட்சியினர் மீது கொலைவெறித் தாக்குதல் நடத்தப்பட்டு, இருவர் படுகொலை செய்யப்பட்டனர்; ஏராளமானோர் படுகாயம் அடைந்தனர். இதிலிருந்தே தமது அறிக்கைகளின் மூலம் திருமாவளவன் வன்முறையைத் தூண்டுவது ஐயமின்றி உறுதியாகிறது.

பாட்டாளி மக்கள் கட்சியினருக்கு எதிராக விடுதலை சிறுத்தைகள் கட்டவிழ்த்து விடும் வன்முறையை காவல்துறையினரும், உளவுத்துறையினரும் முன்கூட்டியே கண்டறிந்து தடுத்து நிறுத்த வேண்டும்.

ஜெ.குருவை கொல்லும் நோக்குடன் வன்முறையில் ஈடுபட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியினரை உடனே கைது செய்வதுடன், அவர்களுக்கு துணை போன காவல்துறை அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் பா.ம.க.வினர் மீது தொடரப்பட்டுள்ள பொய்வழக்குகளை திரும்பப் பெற்று கைது செய்யப்பட்ட அனைவரையும் உடனடியாக விடுதலை செய்ய வேண்டும். இதற்கெல்லாம் மேலாக பா.ம.க.வின் சட்டப்பேரவைக் கட்சித் தலைவராக இருக்கும் ஜெ.குருவுக்கு இதுபோன்ற வன்முறை கும்பல்களால் ஆபத்து ஏற்படக்கூடும் என்பதால் அவருக்கு போதிய அளவு காவல்துறை பாதுகாப்பு வழங்க வேண்டும்". இவ்வாறு ராமதாஸ் கூறியுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in