Published : 18 Nov 2014 11:37 AM
Last Updated : 18 Nov 2014 11:37 AM

அகில இந்தியத் தேர்வுகளுக்கான வயது வரம்பை குறைக்க கூடாது: மத்திய அரசுக்கு வைகோ கோரிக்கை

அகில இந்திய அளவிலான தேர்வுகளுக்கான வயது வரம் பைக் குறைக்கக் கூடாது என்று மத்திய அரசுக்கு மதிமுக பொது செயலாளர் வைகோ கோரிக்கை விடுத்துள்ளார்.

இது தொடர்பாக வைகோ நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

மத்திய அரசின் ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ், ஐ.எப்.எஸ் போன்ற முக்கிய நிர்வாகப் பணி களுக்கான தேர்வுகளை மத்திய தேர்வாணையமான யூபிஎஸ்சி நடத்தி வருகிறது. இந்த தேர்வு களை எழுத இதுவரை இருந்த வயது வரம்பினை மேலும் குறைத்துள்ள மத்திய அரசு, வரும் ஆண்டு முதல் அதை அமல்படுத்தவுள்ளது. இது மிகவும் கண்டனத்துக்குரியது.

தலித்துகள், பழங்குடியினர் மற்றும் மாற்றுத் திறனாளிகள் 35 வயது வரை தேர்வு எழுதலாம் என்று இருந்த நடைமுறை இந்த புதிய முடிவால் 29 வய தாக குறைந்துவிட்டது. இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் 28 வயது வரைதான் தேர்வு எழுத முடியும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் 30 வயது வரை தேர்வு எழுதலாம் என்ற பொதுப் பிரிவினருக்கான வயது வரம்பு தற்போது 25 வயதாக குறைக்கப்பட்டுள்ளது.

மாணவர்கள் இந்த தேர்வில் வெற்றி பெறாமலோ அல்லது நேர்காணலில் சரியான வாய்ப்பை இழக்கிறபோதோ மீண்டும் தேர்வினை எழுத, இதுவரை இருந்த வயது வரம்பு பெரிதும் உதவியது. இதனால் கிராமப்புற மாணவர்கள் பெரிதும் பயன்பெற்றனர்.

இந்நிலையில் சமூக நீதி கொள்கைக்கு மாறாகவும், மாணவர்களுக்கான வாய்ப்பினை மறுக்கின்ற விதத்திலும், வயது வரம்பை குறைத்து அறிவித் திருப்பது சரியல்ல. எனவே, இந்திய குடிமைப் பணி தேர்வுகளில் இதுவரை அனுமதிக்கப்பட்ட வயது வரம்பை தொடர மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x