

சென்னை தாம்பரத்தை அடுத்த புறநகர் ரயில் நிலையங்களில் உள்ள கழிப்பறைகள் ஆண்டுக்கணக்கில் மூடிக்கிடக்கின்றன. இதனால், பயணிகள் குறிப்பாக பெண்கள் பெரிதும் சிரமப்படுகிறார்கள்.
புறநகர் ரயில் நிலையங்கள்
சென்னை தாம்பரத்துக்கும் செங்கல்பட்டுக்கும் இடையே பெருங்களத்தூர், வண்டலூர், ஊரப்பாக்கம், கூடுவாஞ்சேரி, பொத்தேரி, காட்டாங்கொளத்தூர், மறைமலைநகர் உள்ளிட்ட புறநகர் ரயில் நிலையங்கள் அமைந்துள்ளன. இந்த பகுதிகளில் இருந்து பள்ளி, கல்லூரிகளுக்குச் செல்லும் மாணவ-மாணவிகள், அரசு, தனியார் ஊழியர்கள், வியாபாரிகள் என தினமும் பல்லாயிரக்கணக்கான பயணிகள் சென்னை நகருக்குள் வந்துசெல்கிறார்கள்.
பெருங்களத்தூர், கூடுவாஞ்சேரி, ஊரப்பாக்கம், பொத்தேரி உள்ளிட்ட ரயில் நிலையங்களில் பயணிகள் கூட்டம் அதிகளவில் இருக்கும். பொத்தேரி ரயில் நிலையத்தில் செங்கல்பட்டு மற்றும் சென்னை நகரத்தில் இருந்தும் பல ஆயிரக்கணக்கான கல்லூரி மாணவ-மாணவிகள் வந்துசெல்கிறார்கள். இவர்கள் இங்கு அமைந்துள்ள தனியார் பல்கலைக்கழகம் மற்றும் அங்குள்ள கல்லூரிகளில் படிப்பவர்கள்.
மூடிக்கிடக்கும் கழிப்பறைகள்
மேற்கண்ட ரயில் நிலையங்களில் பயணிகளின் வசதிக்காக கட்டப்பட்ட கழிப்பறைகள் வருடக்கணக்காக மூடிக்கிடக்கின்றன. கழிப்பிட வசதி இருந்தும் பயன்படுத்த முடியாமல் பயணிகள் மிகவும் சிரமப்படுகிறார்கள். மாணவ-மாணவிகளும், ஊழியர்களும் வீடுகளிலிருந்து காலை நேரத்தில் அவசர அவசரமாக கிளம்பி வருவதால் ரயில் நிலையத்தில் கழிப்பறை இல்லாததால் மறைவான இடத்தை தேடி அலையும் காட்சி மிகவும் பரிதாபமாக இருக்கிறது. குறிப்பாக பெண்களின் நிலை மிகவும் மோசம்.
திறந்தவெளியில்
மூடப்பட்டு கிடக்கும் கழிப்பறைக்குப் பின்பகுதி மறைவாக இருப்பதால் பல பயணிகள் அங்கு திறந்தவெளியில் சிறுநீர் கழிக்கின்றனர். இதனால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசுகிறது. ரயில் நிலையத்துக்குள் இந்த பாதையை கடந்துவரும் பயணிகள் மூக்கைப் பிடித்துக்கொண்டு செல்லும் காட்சியை தினமும் பார்க்கலாம்.
அதேபோல் இரவு நேரத்தில் ரயிலிலிருந்து இறங்கும் பயணிகள் பலர் ரயில் நிலையத்தில் இருந்து வெளியே வரும் வழியில் பாதையிலேயே சிறுநீர் கழித்துவிடுகிறார்கள். அத்தகைய பயணிகளை மற்ற பயணிகள் கண்டித்தால் கழிப்பிட வசதி இருந்தால் நாங்கள் ஏன் இவ்வாறு செய்யப்போகிறோம் என்று பதிலளிக்கிறார்கள். எனவே, அதற்கு மேல் அவர்களை ஒன்றும் சொல்ல முடிவதில்லை.
எனவே, பல ஆண்டுகளாக மூடிக்கிடக்கும் கழிப்பறைகளை உடனடியாக திறப்பதுடன் கழிப்பிட வசதி இல்லாத புறநகர் ரயில் நிலையங்களில் கழிப்பிட வசதியை ஏற்படுத்தித் தரவேண்டும் என்று பயணிகள் ரயில்வே நிர்வாகத்துக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
ரயில்வே அதிகாரி பதில்
இந்த பிரச்சினை குறித்து சென்னை ரயில்வே கோட்ட உயர் அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, “குறிப்பிட்ட புறநகர் ரயில் நிலையங்களில் கட்டப்பட்டுள்ள கழிப்பறைகளில் தண்ணீர் வசதி உள்ளிட்ட கட்டமைப்புப் பணிகளைச் செய்ய வேண்டியுள்ளது. அந்த பணி முடிவடைந்ததும் கழிப்பறைகளை பராமரிப்பதற்கான டெண்டர் விடப்பட்டு அவை பயணிகளின் பயன்பாட்டுக்கு வரும்” என்றார்.