

அவிநாசியில் குடியிருப்புப் பகுதியில் எரிவாயு உருளை கிடங்கு அமைக்க எதிர்ப்புத் தெரிவித்து, நேற்று கடையடைப்புப் போராட்டம் நடைபெற்றது.
திருப்பூர் மாவட்டம் அவிநாசி பேரூராட்சிக்கு உட்பட்ட மடத்துப்பாளையத்தில் சாலை குறந்தகடு என்ற குடியிருப்புப் பகுதியில் எரிவாயு உருளை கிடங்கு அமைப்பதற்கு பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். சாலை மறியல் உள்ளிட்ட பல்வேறு போராட்டங்களையும் நடத்தி வந்தனர்.
இந்நிலையில், நேற்று முன்தினம் கிடங்குக்கு எரிவாயு உருளைகளை ஏற்றிக்கொண்டு வந்த லாரியை அப்பகுதி பொதுமக்கள் சிறைபிடித்தனர். இதுதொடர்பாக போலீஸார் நடத்திய சமாதான பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாததால், கடையடைப்புப் போராட்டம் நடத்தப்படும் என அறிவித்தனர்.
அதன்படி, அவிநாசி பகுதி முழுவதும் கடையடைப்பு போராட்டம் நடத்தப்பட்டது. பொதுமக்கள் நடமாட்டமின்றி சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன.
இதுகுறித்து அப்பகுதியினர் கூறும்போது, “எங்களின் உணர்வுகளுக்கு அரசு மதிப்பு அளிக்காத சூழலில் கடையடைப்புப் போராட்டத்தில் ஈடுபட்டோம். கிடங்கு அமைய அரசு ஒத்துழைத்தால், பல்வேறு போராட்டங்களை முன்னெடுப்போம்” என்றனர்.