

நீலகிரி மாவட்டத்தில் தொடர்ந்து மழை பெய்து வருவதால், குன்னூர் ரேலியா அணை நீர்மட்டம் உயர்ந்து வருகிறது.
கடந்த ஆண்டு தென்மேற்கு, வடகிழக்குப் பருவ மழைகள் பொய்த்துவிட்ட நிலையில், பெரும்பாலான பகுதிகளில் கடும் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டபோது, விவசாயமும் வெகுவாக பாதிக்கப்பட்டது. வனப் பகுதிகளில் நிலவிய கடும் வறட்சியால், வன உயிரினங்களும் சிரமத்துக்கு உள்ளாகின.
இந்நிலையில், மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகளில் கடந்த இரு நாட்களாக பரவலாக மழை பெய்தது. இதனால், வறட்சியில் சிக்கியிருந்த முதுமலை புலிகள் காப்பகம், மசினகுடி, பொக்காபுரம், குன்னூர் ஆகிய பகுதிகளில் வனத்தீ ஏற்படுவது தவிர்க்கப்பட்டுள்ளது.
வறட்சியால் குன்னூர் நகரின் முக்கிய நீராதாரமான ரேலியா அணை வறண்டு காணப்பட்டது. இதனால், அணையில் இருந்து தண்ணீர் விநியோகத்தை, 3 மாதங்களுக்கு நகராட்சி நிர்வாகம் நிறுத்தியது.
அணையில் 30 அடிக்கு தண்ணீர் தேக்கப்பட்டது. ஊற்றுநீரை தேடியும், அதிக கட்டணம் கொடுத்து தண்ணீர் வாங்கும் நிலைக்கு நகர மக்கள் தள்ளப்பட்டனர்.
கடந்த 4 நாட்களாக குன்னூர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் மழை பெய்தது. இதனால், ரேலியா அணை நீர்மட்டம் 3 அடி வரை உயர்ந்தது. மொத்த கொள்ளளவான 46.5 அடியில், தற்போது 34.5 அடி வரை தண்ணீர் இருப்பு உள்ளது. தண்ணீர் பற்றாக்குறை ஏற்படாமல் கோடையை சமாளித்து விடலாம் என நகராட்சி அதிகாரிகள் நம்புகின்றனர்.