Published : 30 Mar 2017 07:48 PM
Last Updated : 30 Mar 2017 07:48 PM

மைல் கற்களில் இந்தியில் எழுதுவது தொடர்ந்தால் புதிய இந்தி எதிர்ப்பு போராட்டம்: மத்திய அரசுக்கு ஸ்டாலின் எச்சரிக்கை

இந்தி மொழிக்கு மட்டும் மகுடம் சூட்டுவோம் மற்ற மொழிகளை - குறிப்பாக தமிழ் மொழியை மட்டம் தட்டுவோம் என்ற உணர்வில் பாஜக அரசு செயல்படுமேயானால் புதிய இந்தி எதிர்ப்பு போராட்டக் களத்தை சந்திக்க வேண்டியதிருக்கும் என்று திமுக செயல் தலைவர் ஸ்டாலின் எச்சரித்துள்ளார்.

இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், '' இந்தியாவின் பன்முகத்தன்மைக்கு பேராபத்து உருவாக்கும் விதத்தில் மத்தியில் உள்ள பாஜக அரசு தமிழகத்தில் உள்ள வேலூர், கிருஷ்ணகிரி மாவட்ட தேசிய நெடுஞ்சாலைகளின் மைல் கற்களில் ஆங்கில எழுத்துகளை அழித்துவிட்டு இந்தியில் எழுதி வருவதற்கு திமுக சார்பில் கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.

தேசிய நெடுஞ்சாலை 75, 77 ஆகிய முக்கியச் சாலைகளின் வழியாக உள்ள மைல்கற்களில் இப்படி எழுதி இந்தி ஆதிக்கத்தைக் கொல்லைப்புற வழியாகத் தமிழகத்திற்குள் கொண்டு வர துடிப்பது தமிழர்களின் உணர்வுகளைக் கிஞ்சிற்றும் மதிக்காத பாஜகவின் எண்ணவோட்டத்தை காட்டுகிறது.

மத்தியில் பாஜக ஆட்சி அமைந்ததில் இருந்தே சமஸ்கிருதம் மற்றும் இந்தித் திணிப்பில் தீவிர அக்கறை காட்டி வருகிறது. அவ்வப்போது தலைவர் கருணாநிதி மத்திய பாஜக அரசின் இந்தி திணிப்பு நடவடிக்கைகளை கண்டித்து வந்திருக்கிறார். ஐக்கிய நாடுகள் மன்றத்தின் அலுவல் மொழிகளில் ஒன்றாக இந்தி மொழியை அறிவிப்பதற்காக உலக நாடுகளின் ஆதரவைத் திரட்டப் போவதாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் அறிவித்த போது அதை தலைவர் கருணாநிதி கடுமையாக கண்டனம் செய்தார்.

ஆட்சிக்கு வந்த மூன்று வருடத்திற்குள் மாநில மொழிகளின் சமன்பாட்டையும் முக்கியத்துவத்தையும் குறைத்து இந்தி திணிப்பிற்கு மட்டுமே முன்னுரிமை கொடுத்து மத்திய அரசு செயல்பட்டு வருகிறது என்பதற்கு பல உதாரணங்களை சுட்டிக்காட்ட முடியும். சமூக வலைதளங்களில் அரசு அதிகாரிகள் இந்தி மொழியையேப் பயன்படுத்துவது, வெளிநாட்டுத் தலைவர்களுடன் பேசுவதற்கு இந்தி மொழியை பிரதமர் பயன்படுதுவது, மத்திய அரசுப் பள்ளிகளில் மூன்றாவது மொழியாகக் கற்பிக்கப்பட்டு வந்த ஜெர்மன் மொழி அகற்றப்பட்டு, சமஸ்கிருதம் புகுத்தப்பட்டது, சமஸ்கிருத வாரம், இந்தி வாரங்கள் தாராளமாகக் கொண்டாடப்படுவது, சமஸ்கிருத மொழியில் சிறப்புச் செய்திகள் வாசிக்க அரசு நிறுவனமான தூர்தர்ஷனில் அரை மணி நேரம் ஒதுக்குவது, மத்திய அரசின் முழு உதவியோடு உலக இந்தி மாநாடு நடத்துவது என்று அடுக்கடுக்கான இந்தி திணிப்பு நடவடிக்கைகளை மத்திய அரசு தாராளமாக செய்து வருகிறது.

எல்லாவற்றிற்கும் மேலாக அனைவரும் படித்து அறிந்து கொள்ள வேண்டிய இந்திய சட்ட ஆணையத்தின் பல முக்கிய அறிக்கைகள் இப்போதெல்லாம் இந்தி மொழியில் வெளியிடப்பட்டு வரும் சூழ்நிலை உருவாகியிருக்கிறது.

1938ஆம் ஆண்டில் இந்தியைக் கட்டாய பாடமாக்கிய போது தமிழகத்தில் இந்தி எதிர்ப்பு போரின் முதல் களம் அமைந்தது. அதைத் தொடர்ந்து பல்வேறு களங்களைக் கடந்து, 1965ஆம் ஆண்டில் இந்தி ஆட்சி மொழிச் சட்டம் நடைமுறைக்கு வருமென்று அறிவித்த போது தமிழகம் முழுவதும் ஏற்பட்ட கிளர்ச்சி சரித்திரத்தின் ரத்த எழுத்துகளால் பொறிக்கப்பட்டுள்ளது.

தாய்மொழியாம் எங்கள் தமிழ் காக்க தங்கள் இன்னுயிரை நீத்தவர்களுக்கு இன்றுவரை மொழிப்போர் தியாகிகள் தினத்தை கொண்டாடி அவர்களின் உன்னத போராட்ட உணர்வுகளை இன்றைய இளைஞர்கள் மத்தியில் உயர்த்திப் பிடித்துக் கொண்டிருக்கும் இயக்கம் திமுக. ஆகவே இந்தி திணிப்பு எதிர்ப்பு இன்னும் தமிழகத்தில் முனைமழுங்கிப் போகவில்லை கனன்று கொண்டே இருக்கிறது என்பதை பாஜக அரசு உணர வேண்டும்.

இந்திய திருநாட்டின் பிரதமராக இருந்த பண்டித ஜவஹர்லால் நேரு அளித்த 'இந்தி பேசாத மக்கள் விரும்புகிற வரையிலும் ஆங்கிலம் நீடிக்கும்' என்று உறுதிமொழியை மத்தியில் உள்ள பாஜக அரசு புறக்கணித்து தொடர்ந்து இந்தி திணிப்பில் ஈடுபடுவதை உடனே கைவிட்டு, தமிழகத்தில் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளில் ஆங்கிலத்தை அழித்து இந்தியை எழுதுவதை நிறுத்த வேண்டும்.

அது மட்டுமின்றி, இந்திய ஒற்றுமையையும் ஒருமைப்பாட்டையும் பேணிக் காப்பாற்றும் வகையில் அரசியல் சட்டம் எட்டாவது அட்டவணையில் இடம் பெற்றுள்ள மொழிகள் அனைத்தையும் சமமாகப் பாவிக்க முன்வர வேண்டும்.

இந்தி மொழிக்கு மட்டும் மகுடம் சூட்டுவோம் மற்ற மொழிகளை- குறிப்பாக தமிழ் மொழியை மட்டம் தட்டுவோம் என்ற உணர்வில் மத்தியில் உள்ள பாஜக அரசு செயல்படுமேயானால் புதிய இந்தி எதிர்ப்பு போராட்டக் களத்தை மத்தியில் உள்ள பாஜக அரசு சந்திக்க வேண்டியதிருக்கும் என்று எச்சரிக்க விரும்புகிறேன்'' என்று ஸ்டாலின் கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x