

தமிழகத்தில் ஏற்பட்டுள்ள வறட்சி நிலையை சமாளிக்க தேசிய பேரிடர் மீட்பு நிதியில் இருந்து ரூ. 39,565 கோடி வழங்க வேண்டும். அதில் உடனடியாக ரூ.1,000 கோடியை வழங்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதுதொடர்பாக நரேந்திர மோடிக்கு ஓ.பன்னீர்செல்வம் எழுதி யுள்ள கடிதத்தை டெல்லியில் உள்ள பிரதமர் அலுவலகத்தில் தமிழக வருவாய் நிர்வாக ஆணையர் கே.சத்தியகோபால் நேற்று சமர்ப்பித்தார். வறட்சி நிலை தொடர் பான விரிவான அறிக்கையின் நகல், மத்திய வேளாண் அமைச்சக செயலாளர் எஸ்.கே.பட்நாயக் கிடம் கொடுக்கப்பட்டது.
பிரதமருக்கு எழுதிய கடிதத்தில் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கூறியிருப்பதாவது:
தமிழகத்தின் தண்ணீர் தேவை அக்டோபர் முதல் டிசம்பர் வரை பெய்யும் வடகிழக்கு பருவ மழையை முழுவதுமாக நம்பி யுள்ளது என்பதை தாங்கள் அறி வீர்கள். ஆனால், 2016-ல் வடகிழக்கு பருவமழை பொய்த்துவிட்டது. சாதாரணமாக வடகிழக்கு பருவமழை காலத்தில் தமிழகம் 440 மி.மீ. மழை பெறும். தற்போது வெறும் 168 மி.மீ. மழையை மட்டுமே பெற்றுள்ளது. இது 62 சதவீதம் குறைவு. இந்த முறை தென்மேற்கு பருவமழையும் 20 சதவீதம் குறைந்துபோனது.
பெரிய அளவில் மழையைக் கொண்டு வரும் என்று எதிர்பார்க் கப்பட்ட ‘நாடா’ புயலால் பலன் ஒன்றும் கிடைக்கவில்லை. அடுத்து வந்த ‘வார்தா’ புயலால் 3 மாவட் டங்கள் கடுமையாக பாதிக்கப் பட்டன. துரதிருஷ்டவசமாக எதிர் பார்க்கப்பட்ட மழை பெய்ய வில்லை.
பருவமழை பொய்த்த நிலையில், இன்னொரு பக்கம் காவிரி நதிநீர் தீர்ப்பாயத்தின் இறுதி ஆணையின்படி, தமிழகத்துக்குத் தேவையான காவிரி நீரை கர்நாடகம் திறந்துவிடாதது வறட்சி நிலையை இன்னும் மோசமாக்கிவிட்டது. 2016 ஜூன் 1 முதல் டிசம்பர் 31 வரை கர்நாடகம் 179 டிஎம்சி நீரை திறந்துவிட்டிருக்க வேண்டும். ஆனால் வெறும் 66.5 டிஎம்சி நீரை மட்டுமே திறந்துவிட்டது.
இதன்விளைவாக, காவிரி டெல்டா பாசனத்துக்கு நீர் வழங்கக்கூடிய மேட்டூர் அணைக்கு ஒரு போக நெல் சாகுபடிக்கு தேவையான நீர்கூட வரவில்லை.
இந்நிலையில், தமிழகத்தின் வறட்சி நிலை குறித்து அமைச்சர்கள், மூத்த ஐஏஎஸ் அதிகாரிகளைக் கொண்ட குழுக்கள் மாவட்ட வாரியாக ஆய்வு நடத்தி அறிக்கை சமர்ப்பித்துள்ளனர். அதன்படி, தமிழகத்தில் உள்ள 16,682 வருவாய் கிராமங்களில் 13,305 கிராமங்கள் வறட்சி பாதித்த கிராமங்களாக கண்டறியப்பட்டுள்ளன. பெரும் பாலான கிராமங்கள் வறட்சியால் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டி ருப்பது களஆய்வில் தெரிய வந்தது.
வடகிழக்கு பருவமழை முடிந்து விட்ட நிலையில், இனிவரும் காலங்களில் நிலைமை மேலும் மோசமாகும் அபாயம் இருக்கிறது. மாநிலத்தில் நிலவும் வறட்சி நிலையை கருத்தில்கொண்டு, 2016 திருத்தப்பட்ட வறட்சி மேலாண்மை விதிமுறைகளுக்கு உட்பட்டு பாதிப்புகள் அமைந்திருந்ததால் தமிழகம் வறட்சி பாதித்த மாநிலமாக ஜனவரி 10-ம் தேதி அறிவிக்கப்பட்டது.
தென்மேற்கு, வடகிழக்கு பருவமழை பொய்த்துவிட்டதால் அனைத்து நீர்நிலைகளிலும் நீர் மட்டம் மிக மோசமான நிலையில் இருக்கிறது. மாநிலத்தில் உள்ள 15 பெரிய நீர்த்தேக்கங்களில் மொத்த கொள்ளளவு 198.384 டிஎம்சி ஆகும். கடந்த டிசம்பர் 31-ம் தேதி நிலவரப்படி வெறும் 25.742 டிஎம்சி மட்டுமே தண்ணீர் உள்ளது. சென்னைக்கு குடிநீர் வழங்கும் 4 ஏரிகளில் 1.966 டிஎம்சி மட்டுமே தண்ணீர் இருக்கிறது.
பருவமழை பொய்த்துவிட்டதால் பயிர் பாதிப்பு ஏற்பட்ட விவசாயி களுக்கு நிவாரண நிதி வழங்கி யாக வேண்டும். மேலும், மாநிலத் தின் ஒட்டுமொத்த குடிநீர் தட்டுப் பாட்டைச் சமாளிக்கும் வகையில் தற்காலிகமாக குடிநீர் வழங்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். கால்நடைகளைப் பாது காக்க போதுமான தீவனங்களை வழங்க வேண்டும். விவசாயத் தொழிலாளர்களின் வாழ்வாதாரங் களை பாதுகாத்திட போர்க்கால அடிப்படையில் வேலைவாய்ப்பு பெருக்கத் திட்டங்களை உருவாக்க வேண்டும்.
எனவே மேற்கண்ட பணிகளுக் காக தேசிய பேரிடர் மீட்பு நிதியில் இருந்து ரூ.39,565 கோடி வழங்குமாறு கேட்டுக்கொள் கிறேன். அவசர நடவடிக்கை யாக, விவசாய பயிர்களுக்கு ஏற்பட்டுள்ள மிகப்பெரிய அளவிலான பாதிப்புகளை ஆய்வு செய்யவும், மாநிலத்தின் குடிநீர் தட்டுப்பாடு நிலவரம் குறித்து கணக்கெடுக்கவும் மத்திய அரசு குழுவை அனுப்ப வேண்டும். தற்போதைய நிலைமையைச் சமாளிக்க மாநில பேரிடர் மீட்பு நிதியில் உள்ள பணம் போதாது. எனவே, உடனடி நிவாரணப் பணி களையும் வறட்சி நிலையைச் சமாளிக்க மறுவாழ்வுப் பணி களையும் மேற்கொள்வதற்கு தேசிய பேரிடர் மீட்பு நிதியில் இருந்து தமிழகத்துக்கு உடனடியாக ரூ.1,000 கோடி வழங்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.