

குடியரசுத் தலைவர் தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவு அளிக்கவில்லை என்றும் மீரா குமாருக்கே தனது ஆதரவு என்றும் அதிமுக கூட்டணிக் கட்சி எம்எல்ஏவான தமிமுன் அன்சாரி தெரிவித்துள்ளார்.
மனிதநேய ஜனநாயகக் கட்சியின் பொதுச்செயலாளர் தமிமுன் அன்சாரி. 2016 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர்.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு, அதிமுக இரு அணிகளாகப் பிரிந்தது. அப்போது மக்கள் கைகாட்டும் அணிக்கே தனது ஆதரவு என்று சொன்ன தமிமுன் அன்சாரி கருத்துக் கணிப்புப் பெட்டியை வைத்து பரபரப்பை ஏற்படுத்தினார். இறுதியில் எடப்பாடி அணிக்கே நம்பிக்கை வாக்கெடுப்பின்போது வாக்களித்தார்.
அண்மையில், மாட்டிறைச்சி விற்பனைக்கான தடை விவகாரத்திலும் சட்டப்பேரவையில் முதல்வரின் பதில் திருப்தி அளிக்கவில்லை என்று கூறி வெளிநடப்பு செய்திருந்தார்.
குடியரசுத் தலைவர் தேர்தல்
தற்போதைய குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியின் பதவிக் காலம் வரும் ஜூலை 24-ம் தேதியுடன் நிறைவடைகிறது. புதிய குடியரசுத் தலைவரைத் தேர்வு செய்வதற்கான தேர்தல் வரும் ஜூலை 17-ம் தேதி நடைபெற உள்ளது.
இந்தத் தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியின் வேட்பாளராக, பிஹார் ஆளுநராக இருந்த ராம்நாத் கோவிந்த் கடந்த 19-ம் தேதி அறிவிக்கப்பட்டார். இவர் உத்தர பிரதேசத்தின் தலித் சமூகத்தைச் சேர்ந்தவர்.
குடியரசுத் தலைவர் தேர்தலில் எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக மக்களவை முன்னாள் சபாநாயகர் மீரா குமார் அறிவிக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் பாஜக குடியரசுத் தலைவர் வேட்பாளருக்கு அதிமுக ஆதரவு அளித்தபோதிலும், அதன் கூட்டணிக் கட்சி எம்எல்ஏவான தமிமுன் அன்சாரி, மீரா குமாரை ஆதரிப்பதாகக் கூறியுள்ளார்.
முன்னதாக என் பதவியே போனாலும், பாஜகவை ஆதரிக்க மாட்டேன் என்று அன்சாரி கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.