

மதுரையில் ‘எய்ம்ஸ்’ மருத்துவமனையை அமைக்க வலியுறுத்தி, ‘மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கான மக்கள்’ இயக்க போராட்டக் குழு நிர்வாகிகள், தென் மாவட்ட முக்கிய அமைப்புகளின் பிரதிநிதிகள் டெல்லி சென்று மத்திய சுகாதாரத் துறை அமைச்சர், இணை அமைச்சர் மற்றும் செயலரை சந்திக்க முடிவு செய்துள்ளனர்.
மதுரை அருகே தோப்பூரில் ‘எய்ம்ஸ்’ மருத்துவமனை அமைக் கப் போவதாக ஆரம்பத்தில் அறிவிக்கப்பட்டது. அதற்காக தோப்பூரில் 200 ஏக்கர் நிலம் ஒதுக்கி, மத்திய சுகாதாரக் குழுவினரும் அந்த இடத்தைப் பார்வையிட்டனர். தற்போது தமிழக முதல்வர் முதல், அக்கட்சியின் அமைச்சர்கள் வரை தஞ்சாவூருக்கு ‘எய்ம்ஸ்’ மருத்துவமனையை கொண்டு செல்ல முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தென் தமிழகத்தை சேர்ந்த சிறு, குறு தொழிற் சங்கத்தினர், தொழில்முனைவோர், வழக்கறிஞர் கள், மருத்துவர்கள், மாணவர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களை உள்ளடக்கி ‘மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கான மக்கள் இயக்கம்’ தொடங்கப்பட்டு, உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது. தற்போது இரண்டாம் கட்டமாக 5 லட்சம் பேரிடம் மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதற்கு ஆதரவு தெரிவித்து கையெழுத்து பெறும் இயக்கம் நேற்று முன்தினம் தொடங்கப்பட்டது. மதுரை எம்.பி ஆர். கோபாலகிருஷ்ணன் தொடங்கிவைத்த இந்த கையெழுத்து இயக்கத்தில் பொதுமக்கள் ஆர்வமாக கையெழுத்திட்டு வருகின்றனர்.
நேற்று மாலை வரை 18 ஆயிரம் பேர் கையெழுத்திட்டுள்ளனர். அடுத்தகட்டமாக இந்த கையெழுத்து இயக்கத்தை மதுரை, திண்டுக்கல், தேனி, விருதுநகர், ராமநாதபுரம், சிவகங்கை மாவட்ட கல்லூரி மாணவ, மாணவிகளிடம் கொண்டு செல்ல போராட்டக் குழுவினர் முடிவு செய்துள்ளனர். அப்போது கையெழுத்து பெறுவதோடு நிற்காமல், மாணவர்களிடம் ‘எய்ம்ஸ்’ மருத்துவமனையின் முக்கியத்துவம், அந்த மருத்துவமனை தென் தமிழகத்தில் அமைய வேண்டியதன் அவசியம் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்த உள்ளனர். 5 லட்சம் பேரிடம் கையெழுத்து பெற்று முடிந்ததும், அவற்றை குடியரசு தலைவர், பிரதமர், சுகாதாரத்துறை அமைச்சர், இணை அமைச்சர், செயலர், தமிழக முதல்வர், மாவட்ட ஆட்சியர் வரை அனுப்ப திட்டமிட்டுள்ளனர். அடுத்தகட்டமாக தென் மாவட்டங்களில் ஒரு நாள் ‘எய்ம்ஸ்’ விழிப்புணர்வு பேரணி நடத்த திட்ட மிட்டுள்ளனர்.
இதுகுறித்து ‘மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கான மக்கள் இயக்கம்’ ஒருங்கிணைப்பாளர் வி.எஸ்.மணிமாறன் கூறியதாவது:
வரும் ஏப். 5, 6-ம் தேதிகளில் டெல்லி சென்று மத்திய சுகாதாரத் துறை அமைச்சர், இணை அமைச்சர், செயலர் ஆகியோரை சந்தித்து, மதுரையில் ‘எய்ம்ஸ்’ மருத்துவமனைக்கு தேவையான நிலம் இருப்பது குறித்து தெரிவிக்க உள்ளோம். தென் தமிழகத்தில் இந்த மருத்துவமனை அமைக்க வேண்டியதன் அவசியம் பற்றி எடுத்துக்கூற மருத்துவ வல்லுநர்கள், சட்ட வல்லு நர்களுடன் சென்று சந்திக்க திட்ட மிட்டுள்ளோம். மத்திய அரசு, தென் தமிழகத்தில்தான் ‘எய்ம்ஸ்’ அமைக்க ஆர்வமாக இருக்கிறது. அதற்கு தமிழக அரசு ஒத்துழைக்க வேண்டும்.
ஜல்லிக்கட்டுப்போராட்டம் மதுரையில் இருந்துதான் ஆரம்பித்தது. அதுபோல் தென் மாவட்டத்துக்கான ‘எய்ம்ஸ்’ மருத்துவமனைக்கான போராட்டமும் மதுரையில் தொடங்கப்பட்டது. தொடர்ந்து இந்த போராட்டம், தென் மாவட்டங்கள் முழுவதும் தொடர்ச்சியாக நடத்த உள்ளோம். எல்லா தொழில் துறை, மருத்துவத் துறை திட்டங்களும் இதுவரை சென்னை, மற்றும் வடக்கு மாவட்டங்களுக்கே கொண்டு செல்லப்பட்டுள்ளதால் தென் தமிழகம் வேலைவாய்ப்பு, மருத்துவத் துறை, தொழிற் துறையில் வளர்ச்சி பெறாமல் பின்தங்கியுள்ளது.
தற்போது எய்ம்ஸ் மருத்துவமனையையும் நாங்கள் விட்டுக்கொடுத்தால் எதிர்காலத்தில் மதுரை மற்றும் தென் மாவட்டங்கள் நிரந்தரமாகவே புறக்கணிக்கப்படும் வாய்ப்புள்ளது. ஏனென்றால் அதற்கு பிறகு எல்லா வளர்ச்சித் திட்டங்களும் வளர்ச்சிப்பெற்ற மாவட்டங்களுக்கே செல்ல வாய்ப்புள்ளது. அதனால், ‘எய்ம்ஸ்’ மருத்துவமனை வருவதற்காக எத்தகைய போராட்டத்துக்கும் நாங்கள் துணிந்துள்ளோம். இந்த விழிப்புணர்வை மக்கள் மத்தியில் கொண்டு செல்வதுதான் தற்போதைய முதல் இலக்கு. அதை செய்துவிட்டால் அதன்பிறகு இந்த போராட்டத்தை யாராலும் தடுக்க இயலாது.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.