

ஐ.டி பெண் ஊழியரின் நகையை பறித்தவர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.
கர்நாடகாவை சேர்ந்தவர் சிநேகலதா (24). துரைப்பாக்கத்தில் உள்ள மென்பொருள் நிறுவனம் ஒன்றில் பணி செய்து வருகிறார். அதேபகுதி மேட்டுக்குப்பம் குமரன் குடில் பகுதியில் உள்ள விடுதி ஒன்றில் தங்கியுள்ளார்.
நேற்று முன்தினம் இரவு பணியை முடித்து விட்டு விடுதி நோக்கி நடந்து சென்று கொண்டு இருந்தார். மேட்டுக்குப்பம் சக்தி சீனிவாசன் சாலையில் சென்று கொண்டு இருந்தபோது சிநேகலதாவை 4 பேர் ஆட்டோவில் பின் தொடர்ந்து அவர் அணிந்திருந்த நகையை பறிக்க முயன்றனர்.
இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த சிநேகலதா கூச்சலிட்டார். அலறல் சத்தம் கேட்டு அந்த பகுதியில் மளிகை கடை நடத்தி வரும் சேகர் என்பவர் விரைந்தார்.
செயின் பறிப்பை தடுக்க முயன்றார். இதனால், செயின் பறிப்பு கும்பல் கத்தியால் சேகர் மீது தாக்கினர்.
இதில், சேகரின் இடது காது துண்டானது. செயின் பறிப்பில் ஈடுபட்டவர்கள் செயினுடன் தப்பினர். தகவல் அறிந்து துரைப்பாக்கம் போலீஸார் சம்பவ இடம் விரைந்து சேகரை மீட்டு ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர்.
கண்காணிப்பு கேமராவில்
செயின் பறிப்பு நடந்த சக்தி சீனிவாசன் சாலையில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராவில் கொள்ளையர்களின் உருவம் பதிவாகி உள்ளது. அதை அடிப்படையாக வைத்து போலீஸார் விசாரிக்கின்றனர்.