Published : 27 Nov 2013 12:44 pm

Updated : 06 Jun 2017 15:17 pm

 

Published : 27 Nov 2013 12:44 PM
Last Updated : 06 Jun 2017 03:17 PM

சிவாஜி சிலையை அகற்ற முயல்வது அக்கிரமச் செயல்: வைகோ

சென்னை மெரினா கடற்கரையில் அமைக்கப்பட்டுள்ள நடிகர் சிவாஜி கணேசன் சிலையை அகற்ற முயல்வது அக்கிரமச் செயல் என்று தமிழக அரசுக்கு மதிமுக பொதுச் செயலர் வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் இன்று வெளியிட்ட அறிக்கையில், "தமிழ் கலை உலகம் தரணிக்குத் தந்த தவப்புதல்வனாம் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் உலகத்திலேயே ஈடு இணையற்ற நடிகராவார். அதனால்தான் பேரறிஞர் அண்ணா, "ஹாலிவுட் புகழ் நடிகரான மார்லன் பிராண்டோ சிவாஜி கணேசனைப் போல நடிக்க முயற்சி செய்யலாம்" என்றார்.

அறிவாசான் பெரியாரால் 'சிவாஜி' என்ற பட்டத்தைப் பெற்ற நடிகர் திலகத்தை எங்கிருந்தாலும் வாழ்க! என வாழ்த்தினார் பேரறிஞர் அண்ணா. கலைஞரின் கனல் தெரிக்கும் வசனங்களுக்கு தன் சிம்மக் குரலால் உயிர் தந்தவர் செவாலியே சிவாஜி ஆவார்.

வீரபாண்டிய கட்டபொம்மனில் அவரது நடிப்புக்கு ஆசிய - ஆப்பிரிக்க படவிழாவில் சிறந்த நடிகர் என்ற விருது வழங்கப்பட்டது. அமெரிக்காவின் நியூயார்க் நகரத்தின் ஒரு நாள் மேயராக கௌரவிக்கப்பட்டார். மனித உணர்ச்சியின் அத்தனை கோணங்களையும் தன் கண்களிலும், முக அசைவிலும் காட்டக்கூடிய திறன் அவருக்கு நிகராக உலகில் எந்த நடிகரிடமும் நான் கண்டது இல்லை.

மாணவப் பருவத்திலிருந்து நான் அவரது பரம ரசிகனாகவே என்றும் இருக்கிறேன். வாஜ்பாய் அரசில் அன்றைய அஞ்சல்துறை அமைச்சர் பிரமோத் மகாஜன், விதிமுறைகளைத் தளர்த்தி, முப்பது நாட்களுக்குள் சிவாஜி கணேசன் அஞ்சல் தலையை சென்னையில் வெளியிட்டுச் சிறப்புச் செய்ய காரணமாக இருந்தவன் நான்.

நடிகர் திலகத்தின் சிலை கடற்கரை காமராஜர் சாலையில், 2006 இல் தி.மு.க. அரசு நிறுவியபோது, கடற்கரையில் உள்ள இன்னொரு சிலையை சிவாஜி சிலை மறைக்கும் என்று ஏற்க இயலாத ஒரு காரணத்தைக் கூறி, உயர் நீதிமன்றத்தில் ஒருவர் வழக்குத் தொடுத்தார். ஆனால், உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி அமர்வு தடை விதிக்காமல் சிலை திறக்க அனுமதித்தது. வழக்குத் தொடுத்தவரும் இறந்துபோனார்.

இன்னொருவர் அந்த வழக்கை தொடர்ந்து நடத்த முற்பட்டதில் ஒரு மாதத்துக்கு முன்னால், அக்டோபர் 23 ஆம் தேதி அன்று, தமிழக அரசின் தலைமை வழக்கறிஞரான அட்வகேட் ஜெனரல் சோமயாஜி சிலையை அங்கிருந்து அகற்ற வேண்டியது இல்லை என்று வாதிட்டார்.

ஆனால், நேற்றைய தினம் 26.11.2013 இல் தமிழக அரசின் சார்பில், போக்குவரத்துக் காவல்துறை அதிகாரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த பிரமாண வாக்குமூலத்தில், கடற்கரை சாலையில் நடிகர் திலகம் சிவாஜியின்சிலை இருப்பதால் விபத்துகள் ஏற்படுகிறது என்றும், அங்கிருந்து சிலையை வேறு இடத்துக்கு மாற்றி வைக்கலாம் என்று தெரிவித்திருப்பது சிவாஜியின் புகழுக்கு பங்கம் விளைவிக்க முனையும் அக்கிரமச் செயலாகும்.

கோடான கோடி தமிழர்கள் நெஞ்சில் புகழிடம் பெற்றுள்ள நடிகர் திலகத்தின் கீர்த்தி காலங்களைக் கடந்து நிலைத்து நிற்கும்.

அதே கடற்கரைச் சாலையில் மதுபோதையில் வாகனங்களை ஓட்டுவதாலும், தாறுமாறான வேகத்தில் செல்வதாலும் வேறு இடங்களில் எண்ணற்ற விபத்துகள் ஏற்பட்டுள்ளன. எனவே, தமிழக அரசு சிலையை அகற்றவதற்குச் சொல்லும் காரணத்தை ஏற்க இயலாது.

முந்தைய தி.மு.க. அரசு இந்தச் சிலையை நிறுவியது என்ற காழ்ப்புணர்ச்சியால்தான் முதலமைச்சரின் உத்தரவின்பேரில் உயர் நீதிமன்றத்தில் காவல்துறை இந்தக் கருத்தைத் தெரிவித்துள்ளது. இதே வக்கிர எண்ணத்தோடுதான் பத்தினி தெய்வம் கண்ணகி சிலையை அ.தி.மு.க. அரசு அகற்றியது.

சிவாஜி சிலையை அகற்ற முனையும் தமிழக அரசுக்கு பலத்த கண்டனத்தைத் தெரிவிப்பதோடு, அந்த முயற்சியை அடியோடு கைவிட வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்" என்று வைகோ கூறியுள்ளார்.

அன்பு வாசகர்களே....


இந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.


CoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்!


- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை

வைகோசிவாஜி கணேசன் சிலைதமிழக அரசுமெரினா கடற்கரை சாலைசிவாஜி சிலை விவகாரம்

Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

More From this Author