

சேலத்திலிருந்து ரயிலில் சென்னைக்கு கொண்டுவரப்படும்போது பணம் கொள்ளை அடிக்கப்பட்டிருப்பது தமிழகத்துக்கு தலைகுனிவை ஏற்படுத்தியிருப்பதாக தேமுதிக தலைவர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ''சேலத்திலிருந்து இருந்து ரயிலில் ரிசர்வ் வங்கி பணம் சென்னைக்கு கொண்டுவரும்போது , சினிமா காட்சிகளை மிஞ்சும் வகையில், ஓடும் ரயிலில், மேற்கூரையை வெட்டி எடுத்து கொள்ளை அடிக்கப்பட்டிருக்கிறது. இதுபோன்ற சம்பவம் இதுவரை தமிழகத்தில் நடைபெற்றதில்லை. குற்றம் குறித்து எந்த தகவலையும் கண்டுபிடிக்க முடியாத வகையில், மிகப்பெரிய சதியோடி இந்த கொள்ளை சம்பவம் நடைபெற்றுள்ளது. தமிழகம் முழுவதும் கொலை உள்ளிட்ட குற்றச் செயல்கள் தொடர்ந்து வரும் நிலையில், ரயில் நடைபெற்றுள்ளை கொள்ளை, பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது.
வேறு மாநிலத்தவரை அதிகமாக தமிழகத்தில் வேலையில் அமர்த்துவது, அவர்களை உரிய முறையில் கண்காணிக்காதது போன்ற காரணங்களால், இந்த ரயில் கொள்ளை நடைபெற்றிருக்கலாம். இந்த சம்பவம், தமிழகத்துக்கு தலைகுனிவை ஏற்படுத்தியுள்ளது. இந்த கொள்ளைக்கு காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்று விஜயகாந்த் கூறியுள்ளார்.