Published : 14 Dec 2015 08:05 AM
Last Updated : 14 Dec 2015 08:05 AM

செம்பரம்பாக்கம் உபரிநீரை திறக்க முதல்வர் உத்தரவுக்காக காத்திருக்கவில்லை: தலைமைச் செயலர் விளக்கம்

செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து உபரிநீரை திறந்துவிட முதல்வர் உத்தரவுக்காக காத்திருந்ததாக வெளியான செய்திகள் தவறானது. அதிகாரிகளே முடிவு செய்து திறந்து விட்டனர் என தமிழக தலைமைச் செயலாளர் கு.ஞானதேசிகன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக நேற்று அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

பொதுப்பணித்துறையின் வெள்ள ஒழுங்கமைவு விதிகள்படி, பருவமழைக் காலங்களில் நீர்த்தேக் கங்களில் முழு கொள்ளளவை காட்டிலும் 2 அடி குறைவாகவே நீரை தேக்க வேண்டும்.

மேலும், குடிநீர் பற்றாக்குறை காலங்களுக்கு தேவையான நீர் இருப்பு, நீர் திறக்கும்போது தாழ்வான பகுதிகளில் ஏற்படும் பாதிப்புகள், நீர்த் தேக்கத்தின் பாதுகாப்பு இவற்றை கருத்தில் கொண்டே வெள்ள நீர் திறக்கப்படுகிறது.

டிசம்பர் 1-ம் தேதி இந்திய வானிலை ஆய்வு மையம் அதிகன மழை ஒருசில இடங்களில் பெய்யும் என கூறியதே தவிர 50 செமீ மழை பெய்யும் என தெரிவிக்கவில்லை. நாசா வெளியிட்டதாக ஊடகங் களில் வந்த தகவலும் உண்மை யில்லை. மழை அதிகளவில் பெய்த நிலையில், செம்பரம்பாக்கம் ஏரி பகுதியில் பொதுப்பணித்துறை சென்னை மண்டல நீர்வளத்துறை முதன்மை பொறியாளர் தலை மையில் பொதுப்பணித்துறை அதிகாரிகள் முகாமிட்டு, நிலை மையை கண்காணித்து, நீர்ப் பிடிப்பு பகுதிகளில் பெய்யும் மழை, நீர்வரத்தை கணக்கிட்டே, நீர் திறப்பை ஒழுங்குபடுத்தி வந்தனர்.

உபரி நீரை திறக்க, பொதுப் பணித்துறை முதன்மை செயலாளர், தலைமைச் செயலாளரிடம் இருந்து எந்த உத்தரவும் பெற வேண்டிய அவசியம் இல்லை.

எனவே, பொதுப்பணித்துறை அதிகாரிகள், பொதுப்பணித்துறை செயலர், தலைமைச் செயலர் உத்தரவுக்காக காத்திருந்ததாகவும், உயர் அதிகாரிகள் இருவரும் முதல்வர் உத்தரவுக்காக காத்திருந்ததாகவும் கூறப்படுவது தவறானது.

தண்ணீர் திறக்கப்பட்ட நிலையில், சென்னை, காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர்கள், சென்னை காவல்துறை ஆணையர், மாநக ராட்சி ஆணையர் ஆகியோரிடம் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்க அறிவுறுத்தப்பட்டது. நீர் திறப்பு தொடர்பாக, தொலைக் காட்சிகள், மாலை பத்திரிகைகளில் செய்திகள் வெளியாகின. இதன்படி, சைதாப்பேட்டை, கோட்டூர்புரம், ராமாபுரம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து 30 ஆயிரம் பேரும், காஞ்சிபுர பகுதிகளில் 17 ஆயிரத்து 300 பேரும் வெளியேற்றப்பட்டனர். எனவே, போதுமான எச்சரிக்கை விடுக்கப்படவில்லை என்பது தவறானது. மேலும், செம்பரம் பாக்கம் ஏரி நிரம்பி வழிந்ததாக கூறப்படுவதும் தவறானது. ஏரியில் இருந்து உபரிநீர் நீர்ப்போக்கிகள் வழியாகவே திறக்கப்பட்டது.

எனவே, சென்னையில் வெள்ளப்பெருக்கு என்பது, மிகவும் அரிதான ஒரு தேசியப் பேரிடர். நீர்த் தேக்கங்களில் இருந்து உபரிநீர் வெளியேற்றப்பட்டதில் எவ்வித தவறும் நடக்கவில்லை.

இவ்வாறு அதில் கூறப்பட் டுள்ளது.

டிசம்பர் 1-ம் தேதி இந்திய வானிலை ஆய்வு மையம் அதிகனமழை ஒருசில இடங்களில் பெய்யும் என கூறியதே தவிர 50 செமீ மழை பெய்யும் என தெரிவிக்கவில்லை.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x