Published : 13 Jun 2017 08:14 AM
Last Updated : 13 Jun 2017 08:14 AM

தமிழகம் முழுவதும் கடந்த 5 மாதங்களில் பெறப்பட்ட 122 பால் மாதிரிகளில் 26 தரம் குறைந்தவை: உணவு பாதுகாப்புத்துறை ஆய்வில் தகவல்

தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் கடந்த 5 மாதங்களில் பெறப்பட்ட 122 பால் மாதிரிகளில் 26 தரம் குறைந்தவை என உணவு பாதுகாப்புத்துறை ஆய்வில் தெரியவந்துள்ளது.

தமிழகத்தில் பெரும்பாலான தனியார் நிறுவனங்களின் பாலில் ரசாயனக் கலப்பு இருக்கிறது என்று பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கடந்த மே மாதம் தெரிவித்திருந்தார். அதோடு, தமிழகம் முழுவதும் பால் மாதிரிகள் பெறப்பட்டு கலப்படம் செய்யும் நிறு வனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப் படும் எனவும் அவர் அறிவித்தார்.

அதைத் தொடர்ந்து பொதுமக்கள் பயன்படுத்தும் பாலில் கலப்படம் ஏதும் உள்ளதா என்பதை அறிய உணவுப் பாதுகாப்புத்துறை அதிகாரிகள் சோதனைகளை தீவிரப்படுத்தியுள்ளனர்.

மதுரை கோ.புதூரில் சில நாட் களுக்கு முன் பொதுமக்கள் கொண்டு வந்த பால் அதிகாரிகள் முன்னிலை யில் பரிசோதனை செய்யப்பட்டது. அதில், ஒரு பால் மாதிரியில் அதிக நுரை வருவதற்காக சோப்பு ஆயில் கலக்கப்பட்டது தெரியவந்தது. இதே போல, தமிழகம் முழுவதும் நடமாடும் இயந்திரம் மூலம் சோதனை நடத்த உணவு பாதுகாப்புத்துறை முடிவு செய்துள்ளது.

இது தொடர்பாக தமிழக உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி ஒருவர் ‘தி இந்து’விடம் கூறியதாவது:

தமிழகத்தில் சென்னை, மதுரை, கோவை, சேலம், பாளையங் கோட்டை, தஞ்சாவூர் ஆகிய 6 இடங்களில் உணவு பரிசோதனைக் கூடங்கள் செயல்பட்டு வருகின்றன. மாநிலம் முழுவதும் சேகரிக்கப்படும் பால் மாதிரிகள் இந்த ஆய்வுக் கூடங்களுக்கு அனுப்பப்பட்டு பரிசோதிக்கப்படுகின்றன.

கடந்த ஜனவரி மாதம் முதல் மே மாதம் வரை தமிழகம் முழுவதும் பால் விநியோகம் செய்யும் நபர்கள், தனியார் பால் பாக்கெட்டுகள், கடைகள் என பல்வேறு இடங்களில் இருந்து உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் 122 பால் மாதிரிகளை சேகரித்தனர். அந்த மாதிரிகளை பரிசோதனைக் கூடங்களில் ஆய் வுக்கு உட்படுத்தியதில் 26 மாதிரிகள் தரம் குறைவானவை என தெரியவந்துள்ளது.

இந்த 26 மாதிரிகள் தொடர்பாக சட்டப்படி நடவடிக்கை எடுக்கப் பட்டுள்ளது. தொடர்புடைய நிறு வனங்களுக்கு ஆய்வு அறிக்கையின் அடிப்படையில் அபராதம் விதிக்கப் படும். அதிகபட்சமாக அந்த நிறுவனங்களுக்கு ரூ.5 லட்சம் வரை அபராதம் விதிக்க முடியும். இதேபோல இந்த மாதத்திலும் பால் மாதிரிகளை சேகரித்துள்ளோம்.

நடமாடும் இயந்திரம்

தமிழக உணவு பாதுகாப்புத்துறை யிடம் இமேட் (Electronic Milk Adulteration Tester) எனப்படும் நட மாடும் இயந்திரம் ஒன்று உள்ளது. இந்த இயந்திரம் மூலம் பாலில் கலப்படம் உள்ளதா என்பது உடனடியாக தெரியவரும்.

பாலில் கலப்படம் உள்ளதாக புகார் எழுந்ததையடுத்து பொதுமக்க ளின் அச்சத்தைப் போக்கும் வகை யில் இந்த இயந்திரம் மூலம் அனைத்து மாவட்டங்களிலும் சோதனை நடத்த திட்டமிட்டுள் ளோம். அதன்படி சென்னை, திருவள் ளூர், மதுரை ஆகிய 3 மாவட் டங்களில் இதுவரை சோதனை நடைபெற்றுள்ளது.

இனிவரும் நாட்களில் ஒவ்வொரு மாவட்டத்துக்கும் அந்த இயந் திரத்தை அனுப்பப்பட்டு சோதனை மேற்கொள்ளப்படும். பொதுமக்கள் தாங்கள் கொண்டுவரும் பாலை இந்த இயந்திரம் மூலம் இலவசமாக சோதனை செய்துகொள்ளலாம்.

ஒருவேளை அந்தச் சோதனை யில் கலப்படம் இருப்பது தெரிய வந்தால் தொடர்புடைய நிறுவனத் திடம் சட்டப்படி மாதிரிகள் பெறப்பட்டு ஆய்வுக் கூடங்களுக்கு அனுப்பி ஆய்வின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும்.

இதுவரை ரூ.16 லட்சம் அபராதம்

தமிழகத்தில் கடந்த 2011-ம் ஆண்டு முதல் உணவு பாதுகாப்பு மற்றும் தரச் சட்டம் அமல்படுத்தப் பட்டு வருகிறது. கடந்த 2011-ம் ஆண்டு முதல் கடந்த 2017 மார்ச் வரை பால் மாதிரிகள் பரிசோதனையில் தரக்குறைவாக கண்டறியப்பட்ட நிறுவனங்களுக்கு மொத்தம் ரூ.16 லட்சம் அபராதம் விதிக்க ப்பட்டுள்ளது.

எனவே, பொதுமக்கள் தாங்கள் வாங்கும் உணவுப் பொருளில் ஏதேனும் சந்தேகம் இருந்தால் தமிழக உணவு பாதுகாப்புத் துறையின் commrfssatn@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியிலும், 9444042322 என்ற செல்போன் எண் மூலமும் புகார் தெரிவிக்கலாம்.

இவ்வாறு அவர் கூறினார்.

2 வகை மாதிரி சோதனை

மாதிரிகள் சோதனை 2 வகைப்படும். ஒன்று சட்டரீதியாக ஆய்வுக்கு எடுக்கப்படும் மாதிரி (legal sample), மற்றொன்று வழக்கமான கண்காணிப்புக்காக எடுக்கப்படும் மாதிரி (surveillance sample).

இதில் சட்டரீதியாக எடுக்கப்படும் மாதிரியின் சோதனை முடிவு அடிப்படையில்தான் கலப்படம் செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க முடியும். சட்டப்படி எடுக்கப்படும் மாதிரிகளின் பரிசோதனை முடிவில் ஒருவேளை பால் பாதுகாப்பற்றது என தெரியவந்தால் அவர்கள் மீது நீதிமன்றங்கள் மூலம் குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும். தரக்குறைவாக இருந்தால் தொடர்புடைய நிறுவனங்கள் மீது சிவில் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

வழக்கமான கண்காணிப்புக்காக எடுக்கப்படும் மாதிரியின் சோதனையின் முடிவில் தரம் குறைவு என்று கண்டறிந்தாலும், தொடர்புடைய நிறுவனத்துக்கு அறிவுறுத்தல் தரலாமே தவிர, சட்ட நடவடிக்கை எடுக்க இயலாது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x