Published : 05 Apr 2016 03:18 PM
Last Updated : 05 Apr 2016 03:18 PM

ம.ந.கூட்டணியில் இருந்து விஜயகாந்த் விலக வேண்டும்: சந்திரகுமார் தலைமையில் தேமுதிகவினர் போர்க்கொடி

மக்கள் நலக் கூட்டணியுடன் தேமுதிக கூட்டணி சேர்ந்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து தேமுதிகவின் 3 எம்எல்ஏக்கள், 5 மாவட்டச் செயலாளர்கள் உள்ளிட்ட 10 முக்கிய நிர்வாகிகள் போர்க்கொடி தூக்கினர். அதையடுத்து, அவர்கள் அனைவரும் கட்சியில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டனர்.

தமிழக சட்டப்பேரவை தேர்தல் மே 16-ம் தேதி நடக்கிறது. அனைத்து பிரதான கட்சிகளிலும் ஏறக்குறைய கூட்டணிப் பேச்சுவார்த்தைகள் முடிந்து, வேட்பாளர்கள் பட்டியல் அறிவிக்கப்பட்டு வரும் நிலையில், தேமுதிகவில் செவ்வாய்க்கிழமை திடீர் பூகம்பம் வெடித்தது.

தேமுதிக எம்எல்ஏக்கள் வி.சி.சந்திரகுமார் (கொள்கை பரப்பு செயலாளர்), சி.எச்.சேகர், எஸ்.ஆர்.பார்த்திபன், மற்றும் துணைச் செயலாளர் தேனி முருகேசன், உயர்மட்டக் குழு உறுப்பினர் கே.ஆர்.வீரப்பன், மாவட்ட செயலாளர்கள் ஜெ.விஸ்வ நாதன் (வேலூர் மத்தி), என்.கார்த் திகேயன் (திருவண்ணாமலை), செஞ்சி சிவா (விழுப்புரம்), இமயம் என்.எல்.சிவக்குமார் (ஈரோடு தெற்கு மாநகர்), பி.செந்தில்குமார் (ஈரோடு வடக்கு) ஆகிய 10 பேரும் சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் திடீரென செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது சந்திரகுமார் கூறியதாவது:

விஜயகாந்தின் பின்னால் 1980 முதல் இருக்கிறேன். கடந்த 5 ஆண்டுகால அதிமுக ஆட்சி யில், தமிழகத்தில் மிகவும் பாதிக்கப்பட்ட அரசியல் கட்சி தேமுதிகதான். என் மீது 6 வழக்குகள் உள்ளன. பார்த்திபன் மீது 11 வழக்குகள் உள்ளன. எம்எல்ஏக்கள், தலைமைக் கழக நிர்வாகிகளுக்கே இந்த நிலை.

அதிமுக ஆட்சியை அகற்ற எந்த தியாகமும் செய்ய தயார் என்று விஜயகாந்த் கூறிவந்தார். கடந்த மாதம் 10-ம் தேதி தனித்துப் போட்டி என்றார். அதன் பிறகு திடீரென மக்கள் நலக் கூட்டணியுடன் இணைந்து போட்டியிடுவதாக அறிவித்தார்.

கட்சியின் செயற்குழு, பொதுக் குழு கூட்டங்களிலும், மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்திலும், வேட்பாளர் நேர்காணலின்போதும், அதிமுகவை வீழ்த்த திமுகவுடன் இணைவதுதான் சரியான முடிவாக இருக்கும் என்று 95 சதவீத கட்சி நிர்வாகிகள் கூறினர். வேட்பாளர் நேர்காணலுக்கு வந்தவர்களிடம்கூட, ‘‘திமுகவில் இத்தனை சீட் தருவதாக கூறுகி றார்கள். கூட்டணி அமைக்க லாமா?’’ என்று விஜயகாந்த் கேட்டார்.

இந்நிலையில், பெரும்பாலான தேமுதிகவினரின் மனநிலைக்கு எதிரான முடிவை விஜயகாந்த் எடுத்துள்ளார். மக்கள் நலக் கூட்டணியுடன் கூட்டணி சேருவது தற்கொலைக்கு சமம். எனவே, தொண்டர்களின் மனநிலையை புரிந்துகொண்டு மக்கள் நலக் கூட்டணியில் இருந்து தேமுதிக வெளியேற வேண்டும். இது தொடர்பாக ஏற்கெனவே கடந்த 24-ம் தேதி விஜயகாந்திடம் கடிதம் அளித்துள்ளோம். ‘‘வேட்புமனு வாபஸ் பெறுகிற வரைகூட கூட்டணி பற்றி பேசலாம். பொறுமையாக இருங்கள்’’ என்றார் விஜயகாந்த். ஆனால் எங்கள் கோரிக்கை தொடர்பாக இதுவரை அவர் முடிவு எடுக்கவில்லை.

எனவே, தற்போது பத்திரி கைகள் வாயிலாக அவருக்கு கோரிக்கை விடுக்கிறோம். வரும் தேர்தலில் திமுக வெற்றி பெறுவதும், அக்கட்சித் தலைவர் கருணாநிதி முதல்வராக பதவி ஏற்பதும் உறுதி. ஆகவே, திமுகவுடன் தேமுதிக கூட்டணி சேருவதே சரியாக இருக்கும்.

நாங்கள் தேமுதிகவில் இருந்து விலகவில்லை. எங்கள் கோரிக் கைகள் குறித்து புதன்கிழமை மதியத்துக்குள் விஜயகாந்த் நல்ல முடிவு எடுப்பார் என்று நம்புகிறோம். இல்லாவிட்டால், எங்கள் அடுத்தகட்ட முடிவு பற்றி அறிவிப்போம்.

இவ்வாறு சந்திரகுமார் கூறினார்.

இது தேமுதிக மற்றும் மக்கள் நலக் கூட்டணி வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், செய்தியாளர் கூட்டம் நடத்திய அடுத்த சில மணி நேரங்களில், தேமுதிக அதிருப்தி நிர்வாகிகள் அனைவரும் கட்சியில் இருந்து நீக்கப்பட்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x