

சட்டப்பேரவை நிகழ்ச்சிகள் முடிந்து முதல்வர் ஜெயலலிதாவும், எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலினும் கிளம்பியபோது அதிமுக, திமுக தொண்டர்கள் போட்டிப் போட்டு நேற்று வாழ்த்து கோஷங்களை எழுப்பினர்.
தலைமைச் செயலகத்துக்கு முதல்வர் ஜெயலலிதா வருகிறபோதெல்லாம், காமராஜர் சாலை நெடுகிலும் நின்றுகொண்டு அதிமுக தொண்டர்கள் வாழ்த்து கோஷங்களை எழுப்புவது வழக்கம். இதேபோல், தலைமைச் செயலகத்தில் இருந்து முதல்வர் கிளம்பும்போது, தலைமைச் செயலக வாயில் வரை நின்றுகொண்டு முதல்வரை அதிமுகவினர் வாழ்த்துவார்கள்.
அந்த வகையில், நேற்றைய தினம் சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் முடிந்து முதல்வர் சரியாக 12.50 மணிக்கு புறப்பட்டார். அவரது கார் பேரவை வளாகத்தை விட்டு வெளியேறும் வரை, முதல்வரை வாழ்த்தி அதிமுகவினர் கோஷங்களை எழுப்பினர். அந்த நேரத்தில், திமுக பொருளாளரும், சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின், தனது காரை நோக்கி வரவே, அதை கவனித்த திமுக தொண்டர்கள் மற்றும் சில எம்எல்ஏக்கள், ஸ்டாலினை வாழ்த்தி கோஷங்களை எழுப்பினர்.
இதைக் கண்ட அதிமுகவினர், மீண்டும் சப்தமான குரலில் முதல்வரை வாழ்த்தினர். ஜெயலலிதாவையும், ஸ்டாலினையும் அதிமுக மற்றும் திமுகவினர் போட்டிப் போட்டுக்கொண்டு வாழ்த்திய சம்பவம் பேரவை வளாகத்தில் ருசிகரமான நிகழ்வாக அமைந்தது.