

நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமானின் பாஸ்போர்ட்டில் ஒரு வாரத்துக்குள் கூடுதல் பக்கங்களை இணைத்து வழங்க வேண்டும் என்று சென்னையில் உள்ள மண்டல பாஸ்போர்ட் அதிகாரிக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இது தொடர்பாக நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:
நான், நாம் தமிழர் கட்சியின் தலைவராக உள்ளேன். 30 லட்சத் துக்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் இக்கட்சியில் உள்ளனர். மேலும், இயக்குநர் மற்றும் நடிகராகவும் இருக்கிறேன். எனது தொழில் நிமித்தமாகவும் தமிழர்களின் பிரச்சினைகள் குறித்து சர்வதேச கருத்தரங்குகளில் கலந்துகொள் வதற்காகவும் வெளிநாடுகளுக்கு அவ்வப்போது போய் வருகிறேன். அதனால், எனது பாஸ்போர்ட்டில் உள்ள பக்கங்கள் நிரப்பி முடிந்துவிட்டது.
எனவே, அதில் கூடுதல் பக்கங்களை இணைத்து வழங்கும்படி சென்னையில் உள்ள மண்டல பாஸ்போர்ட் அதிகாரியிடம் விண்ணப்பித்தேன். அது தொடர்பான விசாரணை யின்போது, என் மீதான பல்வேறு குற்ற வழக்குகள் நீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதாக காவல் துறை அதிகாரிகள் தெரிவித் துள்ளதால், அதுகுறித்து 30 நாட்களுக்குள் விளக்கம் அளிக்க வேண்டும் என்று மண்டல பாஸ்போர்ட் அதிகாரி என்னிடம் தெரிவித்தார். அதன்படி, தேவை யான தகவல்களைத் தெரிவித் தேன். அதன் பிறகும், நிலுவையில் உள்ள குற்றவழக்குகள் குறித்து தெரிவிக்காமல் நான் மறைத்து விட்டதாகக் கூறி, பாஸ்போர்ட்டில் கூடுதல் பக்கங்கள் இணைத்து கொடுக்க மறுத்துவிட்டார்.
என் மீதான குற்றவழக்குகள் நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கின்றனவே தவிர, எந்த வழக்கிலும் எனக்கு தண்டனை வழங்கப்படவில்லை. பாஸ் போர்ட்டை புதுப்பித்துத் தராத தால் கடந்த 9 மாதங்களாக வெளி நாடுகளில் நடந்த தமிழர்களின் பிரச்சினைகள் தொடர்பான சர்வதேசக் கருத்தரங்குகளில் என்னால் கலந்துகொள்ள முடிய வில்லை. அதனால் நான் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளேன். எனவே, எனது பாஸ்போர்ட்டில் கூடுதல் பக்கங்களை இணைத்து வழங்க உத்தரவிட வேண்டும் என்று மனுவில் சீமான் குறிப்பிட்டுள்ளார்.
உயர் நீதிமன்ற நீதிபதி வி.ராம சுப்பிரமணியன் இந்த மனுவை விசாரித்து, மனுதாரருக்கு ஒரு வாரத்துக்குள் அவரது பாஸ் போர்ட்டில் கூடுதல் பக்கங்களை இணைத்து வழங்க வேண்டுமென உத்தரவிட்டார்.