

மதுரை அருகே சாலையோர மரத்தில் கார் மோதிய விபத்தில் பிரபல நகைக்கடை பங்குதாரர் மனைவியுடன் உயிரிழந்தார்.
மதுரை தெற்குமாசி வீதியை சேர்ந்தவர் சிவக்குமார்(50). இவர் மீனாட்சி அம்மன் கோயில் அருகே உள்ள நகைக்கடை ஒன்றின் பங்குதாரராக இருந்தார். இவரது மகள் வளைகாப்பு நிகழ்ச்சி நடைபெற உள்ளதால் தன் மனைவி மஞ்சுளாவுடன் புதுக்கோட்டை, காரைக்குடி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள உறவினர்களுக்கு அழைப்பிதழ் கொடுத்துவிட்டு கோயிலில் சுவாமி தரிசனம் செய்தார். பின்னர் நேற்று மாலை சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் இருந்து மதுரை நோக்கி அவர்கள் காரில் வந்து கொண்டிருந்தனர்.
மதுரை மாவட்டம், மேலூரை அடுத்த நாவினிப்பட்டி அருகே வந்தபோது சாலையோரத்தில் இருந்த மரத்தில் கார் மோதியது. இந்த விபத்தில் கணவன், மனைவி இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
விசாரணையில் பின்னால் வேகமாக வந்த தனி யார் பேருந்து காரை கடந்து சென்றதால் கார் நிலை தடுமாறி மரத்தில் மோதியதாகத் தெரிகிறது.
இந்த விபத்து குறித்து மேலூர் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.