

வாக்காளர்களுக்கு பணம் கொடுத்த விவகாரம் தொடர்பாக அமைச்சர் விஜய பாஸ்கருக்கு வருமான வரித்துறை சம்மன் அனுப்பியுள்ளது. இதேபோல் நடிகர் சரத்குமார், தமிழ்நாடு எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழக துணை வேந்தர் கீதா லட்சுமி ஆகியோரும் இன்று நேரில் வந்து விளக்கம் அளிக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
சென்னை ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் தங்கள் அணி வேட் பாளர் வெற்றி பெறுவதற்காக அரசியல் கட்சியினர் வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்களை விநியோ கம் செய்து வருவதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதுகுறித்து தேர்தல் ஆணை யம் விசாரணை நடத்தி வந்தது.
இந்நிலையில், தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர், சமத்துவ மக்கள் கட்சித் தலைவரும் நடிகருமான சரத்குமார், தமிழ்நாடு எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழக துணைவேந்தர் கீதாலட்சுமி ஆகியோ ரின் வீடுகள் உட்பட சென்னையில் 25 இடங்கள், விஜயபாஸ்கருக்கு சொந்த மான தொழில் நிறுவனங்கள், உறவினர் கள், நண்பர்கள் வீடு என தமிழகம் முழு வதும் 55 இடங்களில் கடந்த வெள்ளிக் கிழமை ஒரே நேரத்தில் வருமான வரி புலனாய்வு அதிகாரிகள் சோதனை நடத்தினர். அப்போது, ஏராளமான ஆவணங்கள் சிக்கியதாக தகவல் வெளியானது.
மேலும், ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலுக்காக அப்பகுதியில் 85 சதவீத வாக்காளர்களுக்கு தலா ரூ.4 ஆயிரம் வீதம் ரூ.89 கோடியே 65 லட்சத்து 80 ஆயிரம் விநியோகிக் கப்பட்டதாகவும் தகவல் வெளியாகி இருந்தது. நடிகர் சரத்குமார் வீட்டில் கணக்கில் காட்டப்படாத ரூ.10 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டிருந்ததாகவும் கூறப்பட்டது.
இதேபோல் கீதா லட்சுமி வீட்டில் இருந்து சட்ட விரோத பணப் பரிவர்த் தனை தொடர்பான ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டிருந்ததாகவும் தகவல் வெளியானது. சோதனையில் சிக்கிய ஆவணங்களின் விவரம், பணம் போன்றவற்றை வருமான வரித்துறை புலனாய்வு அதிகாரி கள் பட்டியலிட்டு வைத்துள்ளனர்.
இந்நிலையில், நுங்கம்பாக்கத்தில் உள்ள வருமான வரி புலனாய்வு அலுவலகத்தில் இன்று காலை 10.30 மணிக்கு நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்கும்படி அமைச்சர் விஜயபாஸ்கர், நடிகர் சரத்குமார், துணைவேந்தர் கீதா லட்சுமி ஆகி யோருக்கு வருமான வரித்துறை சார்பில் தனித்தனியாக சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.
எந்த மாதிரியான கேள்விகள் கேட்க வேண்டும்? என்பது குறித்த பட்டியலை வருமான வரி புலனாய்வு அதிகாரிகள் தயார் செய் துள்ளனர். விசாரணை முழுவதையும் வீடியோவில் பதிவு செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.
வரி ஏய்ப்பு, தேர்தல் விதிமீறல் போன்ற குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப் பட்டால் சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என வருமான வரி புலனாய்வு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.