

கல்விக்கடனை வசூலிக்க தனியார் ஆட்களை அனுப்புவதை நிறுத்தாவிட்டால் எஸ்பிஐ வங்கிகளை முற்றுகையிடும் போராட்டத்தை நடத்துவோம் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக வேல்முருகன் இன்று வெளியிட்ட அறிக்கையில், ''கோவை துடியலூர் பகுதியைச் சேர்ந்தவர் பத்மபிரியா. இவர் தனது மகனின் எம்பிஏ படிப்புக்காக பாரத ஸ்டேட் வங்கியில் கல்விக்கடன் பெற்றிருந்தார். இந்தக் கடனை உடனே செலுத்த வேண்டும் என்று ரிலையன்ஸ் நிறுவன அதிகாரிகள் மிரட்டியுள்ளனர். இதனால், ‘நாங்கள் தற்கொலை செய்து கொள்ள நேரிடும்’ என்று கோவை மாவட்ட ஆட்சியரிடம் பத்மபிரியா புகார் அளித்துள்ளார். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை தருகிறது.
படித்தவுடன் வேலை கிடைக்காமல் குடும்ப பொறுப்பை தோளில் சுமந்து நிற்கும் மாணவர்களை ரிலையன்ஸ் நிறுவன ஆட்களை கொண்டு மிரட்டும் பாரத ஸ்டேட் வங்கியின் செயல் மிகவும் கண்டிக்கத்தக்கது. இதனை நிறுத்தாவிட்டால், மாணவர்களை ஒன்று திரட்டி தமிழகம் முழுவதும் உள்ள பாரத ஸ்டேட் வங்கிகளை முற்றுகையிடும் போராட்டத்தை தமிழக வாழ்வுரிமைக் கட்சி நடத்தும்'' என்று வேல்முருகன் கூறியுள்ளார்.