தமிழக மீனவர்களுக்கு பாதுகாப்பற்ற நிலை: முத்தரசன் கண்டனம்

தமிழக மீனவர்களுக்கு பாதுகாப்பற்ற நிலை: முத்தரசன் கண்டனம்
Updated on
1 min read

தமிழக மீனவர்களின் உயிருக்கும், உடமைக்கும், தொழிலுக்கும் பாதுகாப்பற்ற நிலை தொடர்வது கடும் கண்டனத்திற்குரியது என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் கூறியுள்ளார்.

இது தொடர்பாக செவ்வாய்க்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கையில், ''தமிழ்நாட்டு மீனவர்களுக்கு எதிராக இலங்கை அரசின் கடற்படை தொடர்ந்து நடத்தி வரும் கொடூரமான தாக்குதலை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக்குழு வன்மையாக கண்டிக்கின்றது.

நேற்றைய தினம் தமிழக மீனவர்கள் மீது கடற்படையினர் குண்டுகள் வீசியும், துப்பாக்கியால் சுட்டும் நடத்திய தாக்குதலில் பிரிட்ஜோ என்ற 21 வயது இளைஞர் கழுத்தில் துப்பாக்கி குண்டு பாய்ந்து கொல்லப்பட்டுள்ளார். பல மீனவர்கள் குண்டு காயம் பட்டுள்ளனர்.

கடந்த இருபது ஆண்டுகாலமாக இத்தகைய தாக்குதல் தொடர்ந்து இலங்கை கடற்படையால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இந்தியாவிலும் இலங்கையிலும் ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ளது. ஆனால் மீனவர்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகளில் மாற்றம் ஏற்படவில்லை.

தமிழக மீனவர்களின் உயிருக்கும், உடமைக்கும், தொழிலுக்கும் பாதுகாப்பற்ற நிலை தொடர்வது கடும் கண்டனத்திற்குரியது.

தமிழக மீனவர்களை தொழில் செய்யவிடாமல் தடுத்து நிறுத்தும் உள்நோக்கத்துடன் இலங்கை அரசு செயல்பட்டு வருகின்றது. மத்திய அரசு தமிழக மீனவர்களை இந்திய குடிமகனாக கருதவில்லையோ என எண்ணத் தோன்றுகிறது.

இன்றுவரை தமிழகத்தை சேர்ந்த 563 மீனவர்களை இலங்கை கடற்படை சுட்டுக் கொன்றுள்ளது, ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர். மீனவர்களின் தொழில் கருவிகள் வலைகள் அறுக்கப்பட்டு சேதமடைந்துள்ளன. 130 படகுகள் பறிமுதல் செய்யப்பட்டு இலங்கை வசம் உள்ளன. நூற்றுக்கும் மேற்பட்ட மீனவர்கள் இலங்கை சிறைச்சாலையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் யார் முதல்வராக இருந்தாலும் மத்திய அரசுக்கு கடிதம் எழுதுவதுடன் தங்களது கடமையை முடித்துக் கொள்கின்றனர்.

மத்திய அரசு தமிழக முதல்வர்களின் கடிதங்களுக்கு உரிய மதிப்பளிப்பதாக உணர முடியவில்லை.

தமிழக மீனவர்கள் உயிருக்கும், உடமைக்கும், தொழிலுக்கும் பாதுகாப்பு அளிக்க வேண்டிய மத்திய, மாநில அரசுகள் தங்களின் கடமையை நிறைவேற்ற தவறிவிட்டன. தமிழக மீனவர்கள் கொல்லப்படுவதற்கு இலங்கை அரசுக்கு, இந்திய அரசு இதுவரை சிறு கண்டனம் கூட தெரிவிக்காமல் இருப்பது வியப்பளிக்கின்றது.

சுட்டுக் கொல்லப்பட்ட பிரிட்ஜோ குடும்பத்திற்கு ரூ. 25 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும். காயம்பட்ட மீனவர்களுக்கும் உரிய நிவாரணம் வழங்க வேண்டும்.

கச்சத்தீவு உள்ளிட்ட மீனவப் பிரச்சனை அனைத்துக்கும் நிரந்தர தீர்வு காண மத்திய, மாநில அரசுகள் உறுதியான நடவடிக்கைகளை உளப்பூர்வமாக எடுத்திட வேண்டும்'' என்று முத்தரசன் தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in