

வரும் மக்களவைத் தேர்தலில் பாஜக, தேமுதிக, மதிமுக ஆகிய கட்சிகளிடையே கூட்டணி அமைய வாய்ப்புள்ளதாக பாஜக மூத்த தலைவர் இல. கணேசன் சூசகமாகத் தெரிவித்தார்.
திருச்சியில் புதன்கிழமை செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் அவர் இதைத் தெரிவித்தார். அவர் மேலும் கூறியது:
பாஜக இளைஞரணி சார்பில் இளம் தாமரை மாநாடு திருச்சியில் வரும் 26-ம் தேதி நடைபெறவுள்ளது. இந்த மாநாட்டில் குஜராத் முதல்வர் நரேந்திர மோடி, பாஜக தலைவர் ராஜ்நாத் சிங் உள்ளிட்ட பல முக்கியத் தலைவர்கள் பங்கேற்கவுள்ளனர். இந்த மாநாடு தமிழக பாஜகவுக்கு பெரும் திருப்புமுனையை ஏற்படுத்தும். நரேந்திர மோடி பாஜகவின் பிரதமர் வேட்பாளர் மட்டுமல்ல, அவர் மக்கள் ஆதரவு பெற்ற வேட்பாளர்.
நாட்டின் மீது அக்கறையும், பற்றும் கொண்டவர்கள் மோடி பிரதமராக வர வேண்டும் என விரும்புகின்றனர். இதற்கு எதிரான கருத்துகளைக் கொண்ட சிலர்தான் அவரை எதிர்க்கின்றனர்.
வரவுள்ள மக்களவைத் தேர்தல் கூட்டணி குறித்து இன்னும் முடிவு செய்யவில்லை. பாஜக, மதிமுக, தேமுதிக ஆகிய கட்சிகள் கூட்டணி அமைத்துப் போட்டியிட வேண்டுமென தமிழருவி மணியன் முயற்சிகளை மேற்கொண்டுள்ளார்.
ரஜினிகாந்த் வாய்ஸ்…
திரைப்பட நடிகர் ரஜினிகாந்த் ஒரு தேசியவாதி. நாட்டு நலனில் அக்கறை கொண்டு, பாஜக கூட்டணிக்கு ஆதரவாக மக்களவைத் தேர்தலில் அவர் வாய்ஸ் கொடுத்தால் அது தமிழகம் மட்டுமன்றி தென் மாநிலங்களிலும் பாஜக கூட்டணிக்கு வலுசேர்க்கும். அவரிடம் இதற்காக அதிகாரப்பூர்வமாக இதுவரை நாங்கள் அணுகவில்லை.
மத்தியில் பாஜக ஆட்சிக்கு வந்தால் இலங்கையில் தமிழர்களுக்கு சம உரிமை மற்றும் பாதுகாப்பு கிடைக்கும். மக்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு 222 எம்.பி.க்களுக்கு மேல் கிடைப்பார்கள் என்ற நம்பிக்கை உள்ளது.
மோடியை நம்பி பாஜக இல்லை
மோடி என்ற தனிநபரை நம்பி பாஜக இல்லை. பாஜகவில்தான் மோடி உள்ளார். அவரது செயல்பாடுகளை வைத்துதான் அவர் பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார் என்றார் இல. கணேசன்.
முன்னதாக மாநாட்டை சிறப்பாக நடத்துவது தொடர்பாக பாஜக மாவட்டத் தலைவர்களுடனான ஆலோசனைக் கூட்டம் திருச்சியில் நடைபெற்றது. கூட்டத்தில், பாஜக மாநிலத் தலைவர் பொன். ராதாகிருஷ்ணன் மற்றும் நிர்வாகிகள் பங்கேற்றனர்.