Published : 30 Apr 2017 08:27 AM
Last Updated : 30 Apr 2017 08:27 AM

தமிழகத்தில் உள்ள 71 லட்சம் குழந்தைகளுக்கு இன்று இரண்டாம் தவணை போலியோ சொட்டு மருந்து முகாம்: 43 ஆயிரம் மையங்கள் அமைப்பு

இந்தியாவில் போலியோ நோயை (இளம்பிள்ளை வாதம்) ஒழிப்பதற்காக ஆண்டுதோறும் 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு 2 தவணைகளாக போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி தமிழகத்தில் முதல் தவணை போலியோ சொட்டு மருந்து முகாம் கடந்த 2-ம் தேதி நடைபெற்றது. இந்நிலையில் மாநிலம் முழுவதும் 5 வயதுக்குட்பட்ட 71 லட்சம் குழந்தைகளுக்கான இரண்டாம் தவணை போலியோ சொட்டு மருந்து முகாம் இன்று நடை பெறுகிறது.

இதுதொடர்பாக சுகாதாரத்துறை நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

தமிழகத்தில் போலியோ சொட்டு மருந்து முகாம்கள் சிறப்பாக நடை பெறுகிறது. இதனால் தமிழகம் 13-வது ஆண்டாக போலியோ இல்லாத மாநிலமாக திகழ்கிறது. இரண்டாம் தவணை சொட்டு மருந்து முகாம் ஏப்ரல் 30-ம் தேதி (இன்று) நடக்கிறது. தமிழகம் முழுவதும் அரசு மருத்துவ மனைகள், ஆரம்ப சுகாதார நிலை யங்கள், அங்கன்வாடி மையங்கள், சத்துணவு மையங்கள், பள்ளிகளில் மொத்தம் 43 ஆயிரத்து 51 மையங்களில் போலியோ சொட்டு மருந்து வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

பயணம் மேற்கொள்ளும் குழந்தை களின் வசதிக்காக முக்கிய பேருந்து நிலையங்கள், சுங்கச்சாவடிகள், ரயில் நிலையங்கள், விமான நிலையங்களில் 1,652 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. தொலைதூரம் மற்றும் எளிதில் செல்ல முடியாத பகுதிகளில் வசிக்கும் குழந்தைகளுக்கு 1,000 நடமாடும் குழுக்கள் மூலமாக போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட உள்ளது. சொட்டு மருந்து வழங்கும் பணியில் சுகாதாரப் பணியாளர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், ஆசிரியர்கள், தன்னார்வலர்கள் என 2 லட்சத்துக்கும் மேற்பட்டோர் ஈடுபடுத்தப்படுகின்றனர்.

போலியோ சொட்டு மருந்து முகாம் காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்படும். 5 வயதுக்குட்பட்ட அனைத்துக் குழந்தைகளுக்கும் போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட வேண்டும். முதல் தவணையில் சொட்டு மருந்து வழங்கப்பட்டிருந்தாலும் இன்று நடக்கும் இரண்டாம் தவணை முகாமில் கண்டிப்பாக சொட்டு மருந்து கொடுக்க வேண்டும். புதிதாக பிறந்த குழந்தைகளுக்கும் சொட்டு மருந்து கொடுப்பது அவசியமாகும்.

சொட்டு மருந்து வழங்கப்படும் குழந்தைகளுக்கு அடையாளத்துக்கு இடது கை சுண்டு விரலில் மை வைக்கப்படும். இது விடுபடும் குழந்தைகளைக் கண்டறிய உதவும். தனியார் டாக்டர்களும் சொட்டு மருந்து வழங்க வேண்டும். இடம் பெயர்ந்து வாழும் தொழிலாளர்களின் குழந்தை களுக்கும் போலியோ சொட்டு மருந்து வழங்கப்படும். இவ்வாறு செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x