Published : 17 Jun 2017 07:09 PM
Last Updated : 17 Jun 2017 07:09 PM

அதிமுக அரசு மீது மீண்டும் நம்பிக்கை வாக்கெடுப்பு: பண பேர விவகாரம் குறித்து சிபிஐ விசாரிக்க வேண்டும் - ஆளுநர் வித்யாசாகர் ராவிடம் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்

தமிழக ஆளுநர் வித்யாசாகர் ராவை திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று மாலை சந்தித்துப் பேசினார். அப்போது, அதிமுக அரசு மீது மீண்டும் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வேண்டும். எம்எல்ஏக்கள் பண பேரம் குறித்து சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என்று ஆளுநரிடம் வலியுறுத்தினார்.

முதல்வர் கே.பழனிசாமி தலைமை யிலான அரசு, கடந்த பிப்ரவரியில் சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கு கோரியது. அப்போது தங்களுக்கு ஆதரவாக வாக்களிக்க அதிமுக எம்எல்ஏக்களுக்கு பல கோடி பேரம் பேசியதாக மதுரை மேற்கு தொகுதி எம்எல்ஏ சரவணன் பேசியிருந்த வீடியோவை ஆங்கில தொலைக்காட்சி ஒன்று கடந்த வாரம் வெளியிட்டது. ‘‘அந்த வீடியோவில் இருப்பது நான்தான். ஆனால், அந்தக் குரல் என்னுடையது அல்ல’’ என்று எம்எல்ஏ சரவணன் மறுப்பு தெரிவித்தார். இந்த வீடியோ விவகாரம் தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்தப் பிரச்சினை தொடர்பாக சட்டப்பேரவையில் விவாதிக்க வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். ஆனால், பேரவைத் தலைவர் அதற்கு அனுமதி அளிக்கவில்லை.

இந்நிலையில், தமிழக ஆளுநர் (பொறுப்பு) வித்யாசாகர் ராவ், மும்பையில் இருந்து நேற்று மாலை சென்னை வந்தார். அவரை ராஜ்பவனில் எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் சந்தித்துப் பேசினார். அவருடன் முன்னாள் அமைச்சர் துரைமுருகன், சட்டப்பேரவை காங்கிரஸ் தலைவர் கே.ஆர்.ராமசாமி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் எம்எல்ஏ அபுபக்கர் ஆகியோரும் சென்றிருந்தனர். ஆளுநரிடம் கோரிக்கை மனுவை அளித்த ஸ்டாலின், அதற்கு ஆதாரமாக ஒரு சி.டி.யையும் கொடுத்தார்.

அந்த மனுவில் கூறியிருப்பதாவது:

அதிமுக எம்எல்ஏக்கள் எஸ்.எஸ்.சரவணன், கனகராஜ் ஆகியோரின் நம்பிக்கை வாக்கெடுப்பு பேரம் குறித்த ‘ஸ்டிங் ஆபரேஷன்’ வீடியோ பதிவுகள் வெளியாகியுள்ளன. லஞ்சம் மற்றும் தவறான தூண்டுதல் மூலம் நம்பிக்கை வாக்கெடுப்பில் சட்டப்பேரவை உறுப்பினர்கள் வாக்களித்திருப்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, தற்போதுள்ள நெருக்கடியான சூழ்நிலையில் ஆளுநர் தலையிட வேண்டும்.

நம்பிக்கை வாக்கெடுப்பில் நடந் துள்ள குளறுபடிகள், ‘டைம்ஸ் நவ்’ வீடியோ உள்ளிட்ட விவகாரங்களின் அடிப்படையில் மீண்டும் புதிதாக ஒரு நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்த முதல்வர் கே.பழனிசாமிக்கு உத்தரவிட வேண்டும். குதிரை பேரம் குறித்து சிபிஐ பாரபட்சமற்ற முறையில் விசாரணை நடத்தி, 1988-ம் ஆண்டு ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறப் பட்டுள்ளது.

ஆளுநர் மாளிகைக்கு வெளியே நிருபர்களிடம் மு.க.ஸ்டாலின் கூறியதாவது:

கடந்த பிப்ரவரி மாதம் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பின்போது, காவல்துறை அதிகாரிகளை எல்லாம் பேரவைக்கு வரவழைத்து எங்களை துன்புறுத்திய காட்சிகளை பார்த்திருப்பீர்கள். ரகசிய வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என நாங்கள் கோரியதை ஏற்கவில்லை. அப்போதே குதிரை பேரம் மூலம் வாக்கெடுப்பு நடத்தி இருக்கிறார்கள் என ஆளுநரிடம் புகார் தெரிவித்து இருந்தோம். அதன்மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஆனால், குதிரை பேரத்தில்தான் இந்த ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது, வாக்கெடுப்பில் வெற்றி பெற்று இருக்கிறது என்பதை தற்போது ஆங்கில தொலைக்காட்சி உறுதிப்படுத்தி இருக்கிறது.

இது தொடர்பாக அதிமுக எம்எல்ஏக்கள் எஸ்.எஸ்.சரவணன், கனகராஜ் ஆகியோர் தெளிவாக பேட்டி அளித்துள்ளனர். அதைத்தான் அந்த ஆங்கில தொலைக்காட்சி ஒளிபரப்பி உள்ளது. இது தொடர்பாக சட்டப்பேரவையில் விவாதிக்க வேண்டும் என தொடர்ந்து 3 நாட்க ளாக குரல் எழுப்பினோம். ஆனால், பேரவைத் தலைவர் அனுமதிக்கவில்லை. ஆதாரத்தை கொடுத்துவிட்டு பேச வேண்டும் என சொன்னார். ஆதாரத்தை கொண்ட சி.டி.யை தருகிறேன் என்றேன். அதெல்லாம் பேரவையில் தரக்கூடாது. எனது அறையில் தர வேண்டும் என பேரவைத் தலைவர் கூறினார். உடனே அவரது அறையிலும் அளித்துள் ளோம். இருப்பினும், அதை அவர் விவாதத்துக்கு எடுத்துக் கொள்வாரா என்பது கேள்விக்குறியாக இருக்கிறது.

இந்நிலையில், தமிழக ஆளுநரை சந்தித்து நடந்த விஷயங்களை விரிவாக எடுத்துச் சொல்லி இருக்கி றோம். ஆங்கில தொலைக்காட்சியில் வெளிவந்த ஆதாரத்தை அடிப்படை யாகக் கொண்டு சம்பந்தப்பட்ட வர்கள் மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும். மேலும், சிபிஐ விசாரணை நடத்தவும் உத்தரவிட வேண்டும். அமலாக்கப் பிரிவினரும் வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அதுமட்டுமல்லாமல், குதிரை பேரத்தின் மூலம்தான் பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு வெற்றி பெற்றிருக்கிறது. எனவே, அந்த வாக்கெடுப்பை ரத்து செய்துவிட்டு, உடனடியாக இந்த ஆட்சியைக் கலைக்க வேண்டும் என ஆளுநரிடம் கோரிக்கை விடுத்திருக்கிறோம். அவரும் சட்டரீதியாக கலந்து பேசி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்திருக்கிறார்.

இதுதொடர்பாக ஏற்கெனவே நீதி மன்றத்திலும் வழக்கு நிலுவையில் இருக்கிறது. தற்போது, ஆங்கில தொலைக்காட்சியில் வந்த ஆதாரத்தையும் அந்த வழக்கில் பதிவு செய்து இருக்கிறோம். 19-ம் தேதி (நாளை) இந்த வழக்கு விசாரணைக்கு வருகிறது. எங்கள் மனு மீது ஆளுநர் நடவடிக்கை எடுப்பார் என்று நம்பிக்கை இருக்கிறது. நடவடிக்கை எடுக்காவிட்டால் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து ஆலோசித்து முடிவு செய்து அறிவிப்போம்.

இவ்வாறு ஸ்டாலின் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x