Published : 21 Dec 2013 19:02 pm

Updated : 06 Jun 2017 16:38 pm

 

Published : 21 Dec 2013 07:02 PM
Last Updated : 06 Jun 2017 04:38 PM

தனுஷ்கோடி மீண்டும் புத்துயிர் பெறுமா?

பரபரப்பாக இயங்கிக் கொண்டிருக்கும் துறைமுகம், அதனருகே ரயில்வே நிலையம், நிரம்பி வழியும் சுற்றுலாப் பயணிகள், இருபுறமும் நீலவர்ணத்தில் கடலும் இதமான காற்றும், தேனியைப் போன்று சுறுசுறுப்பாக எந்த நேரமும் மீன்களைப் பிடிக்கும் மீனவர்கள் இதுதான் தனுஷ்கோடி. இது எல்லாம் பழைய கதை.

1964-ம் ஆண்டு டிசம்பர்-23ந்தேதி அன்று இரவு கோரப்புயல் தனுஷ்கோடியைத் தாக்கியது. இன்றோடு 49 ஆண்டுகள் ஆகிறது. அந்தக் கோரப் புயலின் தாக்கத்திலிருந்து இன்று வரை தனுஷ்கோடி மீளவே இல்லை. அன்று வீசிய புயலில் இந்தியாவின் தேசப் படத்திலிருந்து தனுஷ்கோடி துறைமுகமே காணாமல் போயிற்று.


புயல் வீசிய சமயம் தனுஷ்கோடி ரயில்வே நிலையத்திலும் துறைமுகத்திலும் இருந்த ஆயிரக்கணக்கான மக்கள் நிலத்திலிருந்து கடலுக்கு இடம் மாறினர். புயலுக்கு முன்னர் ராமேசுவரத்தில் இருந்து தனுஷ்கோடிக்கு ஒரு ரெயில் புறப்பட்டுச் சென்றது. சூறாவளிக் காற்றுடன் பலத்த மழை பெய்யவே, ரயில் வழியிலேயே நிறுத்தப்பட்டது. நிறுத்தப்பட்ட அந்த ரயிலில் புயல் மிச்சம் வைத்தது வெறும் இரும்பு சக்கரங்களை மட்டுமே. மற்றவை அனைத்தையும் புயல் கடலுக்குள் இழுத்துச் சென்றது. இந்த ரயிலில் அப்போழுது 200க்கும் மேற்பட்டோர் பயணம் செய்தனர். அதில் 40க்கும் மேற்பட்டவர்கள் குஜராத்தில் இருந்து ராமேஸ்வரம் சுற்றுலா வந்த மருத்துவத்துறை மாணவர்கள் ஆவர். இவர்கள் அனைவரும் புயலுக்கு பலியாயினர்.

தனுஷ்கோடியில் இருந்த பெரிய பெரிய கட்டடங்கள் ஒரு பிள்ளையார் கோயில், சர்ச், இஸ்லாமியர்களின் அடக்கஸ்தலம் என அனைத்தும் இடிந்து தரை மட்டமாயின. அப்போது தந்தி மற்றும் டெலிபோன் கம்பங்கள் சாய்ந்து விழுந்து விட்டதால் வெளி உலகத்துக்கும் ராமேஸ்வரம் இடையே தகவல் தொடர்புகள் அனைத்தும் துண்டிக்கப்பட்டுவிட்டன. இதனால் சேதாரத்தின் விவரங்களும் உடனடியாக சென்னைக்குத் தெரியவில்லை.

பின்னர் அவர்களைக் காப்பாற்ற கப்பல்கள், மோட்டார் படகுகள், ஹெலிகாப்டர், விமானங்கள் ராமேஸ்வரம் நோக்கி விரைந்தன. பாதிக்கப்பட்டவர்களுக்கு விமானத்தில் இருந்து சாப்பாடு பொட்டலங்களும் போடப்பட்டன. புயலில் தப்பியவர்களுக்கு மருத்துவ சிகிச்சை அளிக்க தமிழகத்தில் பல இடங்களில் இருந்தும் உடனடியாக மருத்துவர்கள் ராமேஸ்வரத்துக்கும் அனுப்பப்பட்டனர்.

இறுதியில் தனுஷ்கோடி பகுதியில் வெள்ளம் வடிவதற்கு ஒரு வாரம் ஆயின. கடற்கரையில் எங்கு பார்த்தாலும் பிணங்கள் குவியல் குவியலாகக் கிடந்தன. பிணங்களை கழுகுகள் தின்றன. அவைகள் எல்லாம் சேகரிக்கப்பட்டு புதைக்கப்பட்டது.

இன்று தனுஷ்கோடியில் வெறும் இருநூறு பாரம்பரியமான மீனவக் குடும்பங்கள் மட்டுமே ஓலைக் குடிசையில் வாழ்ந்து வருகின்றனர். ராமேஸ்வரத்திலிருந்து தனுஷ்கோடிக்கு மூன்றாம் சத்திரம் வரை மட்டுமே சாலை வசதியுள்ளது. மூன்றாம் சத்திரத்திலிருந்து தனுஷ்கோடிக்கு சுமார் எட்டு கிலோமீட்டர் வரையிலும் நடந்தே தான் செல்ல வேண்டும்.

தனுஷ்கோடியில் உள்ள ஒரே அரசு நிறுவனம் என்றால் அது ’அனைவருக்கும் கல்வி’ திட்டத்தின் மூலம் மாவட்ட நிர்வாகம் மீனவர்களின் குழந்தைகள் படிக்க 8ம் வகுப்பு வரையிலும் உள்ள நடுநிலைப் பள்ளி மட்டும் தான். மேலும் அவசரத் தகவல்களைப் பறிமாறிக் கொள்ள தகவல் தொடர்பு வசதியோ, மின்சார வசதி, மருத்துவ வசதிகள் ஏதும் இல்லாமல் தனுஷ்கோடி மீனவ மக்கள் சிரமத்துடன் வாழ்ந்து வருகின்றனர்.

தனுஷ்கோடியின் கடற்கரை பகுதியில் இயற்கையாகவே அதிகளவில் கடலரிப்பு ஏற்படுகின்றது. இதனால் மேலும் மேலும் இதன் பரப்பளவு குறுகிக் கொண்டேச் செல்கின்றது. இதனை தாமதமாக உணர்ந்த அரசு தற்போது மூன்றாம் சத்திரம் பகுதியில் கடல் அரிப்பை தடுக்க தடுப்புகளை உருவாக்கி வருகின்றது.

இதுகுறித்து தனுஷ்கோடி பாலம் பகுதியில் வசித்து வரும் மீனவப் பெண் ரேவதி கூறுகையில், '' எனக்கு 30 வயதாகின்றது. நான் பிறந்து, வளர்ந்தது, திருமணம் முடித்தது எல்லாம் தனுஷ்கோடியில்தான். எனக்கு நினைவு தெரிந்த நாளில் இருந்து இந்தப் பகுதியில் மின்சாரம் கிடையாது, சாலை வசதி கிடையாது, குடிக்க குடிநீர் குழாய் வசதி கிடையாது. தண்ணீர் சேகரிக்க நாங்கள் கடல் ஊற்றுத் தண்ணீரைத் தான் நம்பியுள்ளோம். எங்களுக்கு குறைந்தபட்ச வசதியாக சோலார் மின்வசதியாவது செய்து தரவேண்டும், என்றார்.

தனுஷ்கோடியைச் சார்ந்த மீனவர் கட்டையன் கூறியதாவது, " தனுஷ்கோடியில் எங்கள் குழந்தைககள் பயில 8ம் வகுப்பு வரையிலும் பள்ளி உள்ளது. அதனை 12ம் வகுப்பு வரையிலும் தரம் உயர்த்த வேண்டும். இப்போது, மேலும் படிக்க வேண்டும் என்றால் 18 கிலோமீட்டர் தூரத்திற்கு, ராமேஸ்வரத்திற்கு எங்கள் குழந்தைகள் செல்ல வேண்டி உள்ளது. இதனால் எங்கள் குழந்தைகள் 8ம் வகுப்போடு படிப்பை நிறுத்திவிட்டு, கடல் வேலைக்குச் சென்று விடுகின்றார்கள்" என்றார்.

தனுஷ்கோடி பற்றி சமூக ஆய்வாளர் தாகிர் சைபுதீன் கூறுகையில், "தனுஷ்கோடியிலிருந்து இலங்கைக்கு கப்பல்விடும் வாய்ப்புகள் இன்றும் உள்ளது. ஏற்கெனவே தனுஷ்கோடியில் துறைமுகம் இருந்த இடத்திலேயே மீண்டும் இதனை நிறுவலாம். இதன் மூலம் தனுஷ்கோடிக்கு தரை மற்றும் ரயில் போக்குவரத்து மீண்டும் சாத்தியமாகும். சுற்றுலாப் பயணிகளைக் கவரும் விதத்தில் ராமேஸ்வரத்திலிருந்து தனுஷ்கோடிக்கு படகுப் போக்குவரத்து, அலைச்சறுக்கு இவற்றை இந்தப் பகுதியில் அனுமதிக்கலாம்.

இதன் மூலம் அரசிற்கு அந்நியச் செலாவணியையும் ஈட்டித் தருவதோடு, உள்ளுர் மக்களின் பொருளாதாரமும் உயர உறுதுணையாகவும் இருக்கும்" என்றார்.

அரசு கவனிக்குமா?


ராமேஸ்வரம்தனுஷ்கோடி

Sign up to receive our newsletter in your inbox every day!

More From This Category

More From this Author

x