

டெல்லியில் திருப்பூர் மருத்துவர் மர்ம மரணம் குறித்த உண்மைகளை கண்டறிய விசாரணை நடத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் கோரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ''திருப்பூரைச் சேர்ந்த பனியன் தொழிலாளி கணேசன் என்பவரது மகன் டாக்டர் சரவணன், டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் எம்.டி. மேற்படிப்புக்காக சேர்ந்த 2 வாரங்களே ஆன நிலையில் கடந்த சனிக்கிழமை மர்மமான முறையில உயிரிழந்துள்ளார்.
அவர் தங்கியிருந்த அறையில் வலது கையில் விஷ ஊசி செலுத்தப்பட்ட நிலையில் அவர் சடலமாகக் கிடந்ததாக டெல்லி காவல் துறை தெரிவித்துள்ளது. அவர் எந்த வகையிலும் தற்கொலை செய்து கொள்ள வாய்ப்பே இல்லை என குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
இந்தியாவின் உயர்ந்த மருத்துவ கல்வி நிறுவனத்தில் கடுமையான போட்டி நிலவக் கூடிய பிரிவில் முழுக்க முழுக்க தனது கல்வித் தகுதியின் அடிப்படையில் சரவணன் இடம் பிடித்துள்ளார். அங்கு சேர்ந்த சில நாட்களிலேயே அவர் மர்ம மரணம் அடைந்திருப்பது பலவித சந்தேகங்களை எழுப்பியுள்ளது.
மத்திய அரசின் கட்டுப்பாட்டில் எய்ம்ஸ் நிறுவனம் உள்ளதால் இந்த விஷயத்தில் நேர்மையான விசாரணைக்கு மத்திய அரசு உத்தரவிட வேண்டும். இந்த விஷயத்தில் தமிழக அரசு சிறப்பு கவனம் செலுத்தி உண்மையை கண்டறிய நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்று ஜி.ராமகிருஷ்ணன் கூறியுள்ளார்.