

முன்னாள் தலைமைச் செயலாளர் ராமமோகன் ராவுக்கு மீண்டும் பணி வழங்கப்பட்டிருப்பது அதிர்ச்சி அளிப்பதாக திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
மேலும், ராமமோகன் ராவிற்கு மீண்டும் பணி வழங்க ஏற்பட்ட நெருக்கடியும், நிர்பந்தமும் என்ன என்பதை தமிழக மக்களுக்கு வெளிப்படையாகத் தெரிவிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக வெள்ளிக்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கையில், "நாடு முழுவதும் பரபரப்புக்குள்ளான வருமான வரித்துறை ரெய்டுக்குள்ளாகி, காத்திருப்புப் பட்டியலில் ஏறக்குறைய மூன்று மாதங்களாக இருந்த முன்னாள் தலைமைச் செயலாளர் ராமமோகன் ராவுக்கு பினாமி அதிமுக அரசு மீண்டும் பணி வழங்கியிருப்பது அதிர்ச்சியளிக்கிறது.
தமிழகத்தின் தன்மானச் சின்னமாக விளங்கும் தலைமைச் செயலகத்தில் உள்ள தலைமைச் செயலாளர் அறையிலேயே வருமான வரித்துறை ரெய்டு நடந்தது. அந்த அளவுக்கு தலைமைச் செயலாளராக நியமிக்கப்பட்டதிலிருந்து அத்துமீறி செயல்பட்ட பி.ராமமோகன ராவ். 21.12.2016 அன்றைய ரெய்டுக்குப் பிறகும் மாற்றப்படாமல் இருந்தார்.
அது மட்டுமல்ல, "நான் இன்னமும் தலைமைச் செயலாளர்தான். என்னை யாரும் மாற்ற முடியாது" என்றெல்லாம் சவால் விட்டு பேட்டியளித்தார். தனது அதிகார துஷ்பிரயோக நடவடிக்கை மூலம் ஒட்டுமொத்த தமிழக ஐ.ஏ.எஸ் அதிகாரிகளுக்கே அவப்பெயரைத் தேடித் தந்த இந்த முன்னாள் தலைமைச் செயலாளர் தமிழக அரசு வரலாற்றில் ஒரு கரும்புள்ளியை தோற்றுவித்ததை யாரும் மறந்து விட முடியாது.
வருமான வரி ரெய்டுக்குப் பிறகு திமுகவும் மற்ற கட்சிகளும் முன் வைத்த கோரிக்கைகளால் வேறு வழியின்றி ராம மோகனராவ் தலைமைச் செயலாளர் பதவியிலிருந்து 22.12.2016 அன்று மாற்றப்பட்டார்.
ஆனால் முதலமைச்சராக ஓ.பன்னீர்செல்வம் இருந்தவரை அவர் மீது வேறு எந்த விதமான துறை ரீதியான நடவடிக்கையோ அல்லது கைது நடவடிக்கையோ மேற்கொள்ளவில்லை. ரெய்டு நடைபெற்ற போது முதலமைச்சர் அலுவலகத்தில் அமர்ந்திருந்தாலும் அது பற்றி கருத்தும் கூறவில்லை. சட்டமன்றத்தில் கூட இந்த ரெய்டு குறித்து எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை. அந்த அளவிற்கு ராமமோகன ராவ் ரெய்டு பற்றிய ரகசியத்தைக் சிரமேற்கொண்டு காப்பாற்றினார் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம்.
"தமிழ்நாடு அரசு என்று ஒன்று இருக்கிறதா?" "என்னை ரெய்டு செய்வதற்கு மத்திய அரசுக்கு எங்கே அதிகாரம் இருக்கிறது?" "தலைமைச் செயலாளர் அறைக்குள் நுழைய மத்திய தொழிற்பாதுகாப்பு போலீஸுக்கு என்ன அதிகாரம் இருக்கிறது?" என்றெல்லாம் பகிரங்கமாக கேள்வி எழுப்பினார் ராமமோகன் ராவ்.
இப்படி சவால் விட்ட வேறு எந்த ஐ.ஏ.எஸ் அதிகாரியையும், மாநில அரசு இவ்வளவு தூரம் காப்பாற்றியிருக்குமா? பல நூறு கோடி ரூபாய்க்கு மேல் புது கரன்சி நோட்டுக்களும், கிலோ கணக்கில் தங்கமும் கைப்பற்றப்பட்ட வருமான வரி ரெய்டில் தொடர்புடையவர் என்று சந்தேகிக்கப்பட்ட ஒருவர் மீது மத்திய அரசுதான் நடவடிக்கை எடுக்காமல் விட்டு விடுமா என்றெல்லாம் அனைவர் மத்தியிலும் அப்போதே நியாயமான கேள்வி எழுந்தது.
இன்று எப்படி "எனக்கும் சேகர் ரெட்டிக்கும் தொடர்பில்லை" என்று முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் சொல்கிறாரோ அதே மாதிரிதான் இந்த ராமமோகன ராவும் பேட்டியளித்தார். மணல் வழங்கும் அரசு ஆணைகள், அது தொடர்பான நிர்வாக உத்தரவுகள் தலைமைச் செயலாளருக்கு தெரியாமல் வெளியே போக முடியாது என்பது தெரிந்தும் ராமமோகன ராவ் அப்படியொரு அகங்காரமான பேட்டியைக் கொடுத்தார்.
மணல் மாபியா சேகர் ரெட்டி இரண்டாவது முறையாக கைது செய்யப்பட்டுள்ளார். ஆனால் அந்த ரெய்டில் தொடர்பு உடையவர் என்று சந்தேகப்பட்டு, மாநிலத்தின் தலைமைச் செயலகத்திலேயே அவரது அலுவலகத்தை ரெய்டு செய்து விட்டு இன்றைக்கு அவருக்கு மீண்டும் பணி வழங்கப்படுகிறது என்றால் இது நிர்வாக அலங்கோலமா அல்லது அவரை காப்பாற்றும் முயற்சியா என்ற கேள்வி எழுகிறது.
மணல் மாபியாக்களுடன் தொடர்பு என்று நடைபெற்ற வருமான வரித்துறை ரெய்டின் அடுத்த கட்ட நடவடிக்கைகள் ஏன் ராமமோகன ராவை நெருங்கவில்லை? அவருக்கு மத்தியிலும், மாநிலத்திலும் இப்படியொரு அரிய பாதுகாப்பு எப்படி கிடைத்தது? யாருக்கு விடுத்த மிரட்டலால் இப்போது ராமமோகன ராவிற்கு தொழில் முனைவோர் மேம்பாட்டு இயக்குனர் பதவி வழங்கப்பட்டுள்ளது? எல்லாமே முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்தில் நீடிக்கும் மர்மம் போலவே தொடருகிறது.
எங்கும் பேசப்பட்ட ஒரு வருமான வரித்துறை ரெய்டில் எந்தவித நடவடிக்கைக்கும் உட்படுத்தாமல் மூன்று மாதங்களுக்குள் மீண்டும் பணி வழங்கப்படுகிறது என்றால், ராமமோகன் ராவுக்கு மாநிலத்தில் உள்ள "குற்றவாளி" வழிகாட்டும் ஆட்சியில் மட்டுமல்ல- மத்தியிலும் எப்படிப்பட்ட செல்வாக்கு இருக்கிறது என்பதை எடுத்துக் காட்டுகிறது.
"ஆளைக் காட்டு ரூலைச் சொல்கிறேன்" என்று கூறுவார்கள் என அரசாங்க வட்டாரத்தில் எப்போதும் ஒரு பழமொழி சொல்வார்கள். அதுதான் ராமமோகன ராவ் விஷயத்தில் நடந்திருக்கிறது. ரூபாய் 200 லஞ்சம் வாங்கிய அரசு அதிகாரிகள் கைது, சிறையில் அடைப்பு என்று ஒரு புறமும், 200 கோடி வருமான வரி ரெய்டில் தொடர்புடைய ஐ.ஏ.எஸ். அதிகாரி என்றால் பாதுகாப்பு என்ற வகையில் ஊழலுக்கு எதிரான நடவடிக்கையில் இரட்டை வேடம் போடுவதைத்தான் காட்டுகிறது.
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா இருந்த போது 20-க்கும் மேற்பட்ட ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை புறக்கணித்து விட்டு தலைமைச் செயலாளராக நியமிக்கப்பட்ட ராமமோகன் ராவ் "குற்றவாளி" வழிகாட்டும் பினாமி அரசின் நிழலில் நிம்மதியாக பவனி வருகிறார் என்பது வேதனையாக இருக்கிறது.
ஆனால் நடப்பவற்றை நாட்டு மக்கள் மிக உன்னிப்பாக கவனித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்.
மணல் மாபியா சேகர் ரெட்டிக்கும் ராமமோகன் ராவுக்கும் உள்ள தொடர்பு என்ன? எதற்காக செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் உள்ள தலைமைச் செயலாளர் அலுவலகமும், வீடும், அவரது மகன்களின் வியாபார நிறுவனங்களும் வருமான வரித்துறை, அமலாக்கப்பிரிவு மற்றும் சி.பி.ஐ. போன்ற புகழ் பெற்ற நிறுவனங்களைப் பயன்படுத்தி ரெய்டு செய்யப்பட்டன? அதில் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் எல்லாம் என்ன ஆயிற்று? ஏன் மேல் நடவடிக்கை எடுக்கவில்லை? நேர்மையாளராக கருதப்படும் புதிய தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் எப்படி இப்படியொரு பணி நியமன அரசு ஆணை வெளியிட ஒப்புக் கொண்டார்? என்பது பற்றியெல்லாம் மத்திய, மாநில அரசுகள் விரைவாக ஒரு வெள்ளையறிக்கை வெளியிட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
குறிப்பாக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி ராமமோகன் ராவிற்கு மீண்டும் பணி வழங்க ஏற்பட்ட நெருக்கடியும், நிர்பந்தமும் என்ன என்பதை தமிழக மக்களுக்கு வெளிப்படையாகத் தெரிவிக்க வேண்டும் என்று வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.