Published : 15 Oct 2013 05:38 PM
Last Updated : 15 Oct 2013 05:38 PM

சென்னை டென்னிஸ் அரங்கத்தை மேம்படுத்த ரூ.4.5 கோடி: ஜெயலலிதா உத்தரவு

சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள டென்னிஸ் அரங்கத்தை ரூ.4.5 கோடி செலவில் மேம்படுத்த நிதி ஒதுக்கீடு செய்து முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.

இது தொடர்பாக அரசு இன்று வெளியிட்ட செய்திக் குறிப்பு:

1995-ம் ஆண்டு 7-வது தெற்காசிய விளையாட்டுப் போட்டிகள் சென்னையில் நடைபெற்ற போது, டென்னிஸ் போட்டிகளை நடத்துவதற்காக நவீன வசதிகளுடன் கூடிய உலகத் தரம் வாய்ந்த டென்னிஸ் விளையாட்டு அரங்கம், சென்னை நுங்கம்பாக்கத்தில் முதல்வர் ஜெயலலிதாவின் முந்தைய ஆட்சிக் காலத்தில் நிர்மாணிக்கப்பட்டது.

இந்த அரங்கம் நிர்மாணிக்கப்பட்டு 18 ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையில், இதன் உள்கட்டமைப்புகள், ஆடுகளங்கள், மின் அமைப்புகள் போன்றவை பன்னாட்டு அளவிலான போட்டிகளை நடத்துவதற்கு வசதியாக மாற்றியமைக்கப்பட வேண்டியது அவசியமாகிறது.

எனவே, இங்குள்ள செயற்கை இழை டென்னிஸ் ஆடுகளங்கள், மின்னொளி அமைப்புகள், ஸ்கோர் போர்டு ஆகியவற்றை மாற்றியமைத்தல், சீரமைப்புப் பணிகளை மேற்கொள்ளுதல், தொலைக்காட்சி ஒளிபரப்பு வசதி, வீரர்கள் உடை மாற்றும் அறைகள், முக்கியப் பிரமுகர்கள் அறை போன்றவற்றை நவீன வசதிகளுடன் மாற்றியமைத்தல் மற்றும் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துதல் போன்ற பணிகளை மேற்கொள்வதற்காக ரூ.4 கோடியே 50 லட்சம் நிதி வழங்க ஒப்புதல் வழங்கி முதல்வர் உத்தரவிட்டுள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x