

வளர்ப்பு யானைகள் பராமரிப்பை கண்காணிக்க தலைமை வன உயிரின காப்பாளர் தலைமையில் மாநில அளவிலான வளர்ப்பு யானைகள் நலக் குழு அமைத்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
கோயில்களில் உள்ள யானை கள் முறையாக பராமரிக்கப்படுவ தில்லை என அடிக்கடி புகார்கள் எழுந்தன. இதன் காரணமாக தமிழக கோயில்களில் உள்ள 3 யானைகள் அடுத்தடுத்து இறந்துள்ளன. எனவே, கோயில் யானைகளை பராமரிக்க ஒருங்கிணைந்த திட்டம் ஒன்றை அரசு உருவாக்க வேண்டும் என்று கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் ராதா ராஜன் என்பவர் பொதுநல வழக்கு தொடர்ந்திருந்தார்.
அதை விசாரித்த தலைமை நீதிபதி சஞ்சய் கிஷன் கவுல், நீதிபதி ஆர்.மகாதேவன் ஆகியோரைக் கொண்ட முதன்மை அமர்வு, கோயில் யானைகள் பராமரிப்பை கண்காணிக்க குழு அமைக்க வேண்டும் என்று உத்தர விட்டிருந்தது. அதைத் தொடர்ந்து, தலைமை வன உயிரின காப்பாளர் தலைமையில் 4 பேர் கொண்ட குழு அமைத்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
இது தொடர்பாக வனத்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:
கடந்த 1972-ல் உருவாக்கப்பட்ட வன உயிரின பாதுகாப்புச் சட்டம், பிரிவு 64-ன் கீழ், 2011-ல் தமிழ்நாடு பிணை யானைகள் (மேலாண்மை மற்றும் பராமரிப்பு) விதிகள் உருவாக்கப்பட்டுள்ளன. அதன் அடிப்படையில், உயர் நீதிமன்ற உத்தரவின் பேரில் தற்போது வளர்ப்பு யானைகள் பராமரிப்பை கண்காணிக்க குழு அமைத்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
தலைமை வன உயிரின காப்பாளரை தலைவராகவும், வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா இயக்குநரை உறுப்பினர் செயலராகவும், கால்நடை பராமரிப்பு மற்றும் மருத்துவத்துறை இயக்குநர், இந்து சமய அறநிலைய ஆட்சித் துறை ஆணையர் ஆகியோரை உறுப்பினர்களாகவும் கொண்ட குழு அமைக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மாவட்ட அளவிலான குழு அமைப்பது குறித்து தனியாக ஆணை வெளியிடப்படும் என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மாவட்ட அளவிலான வளர்ப்பு யானை நலக் குழுவின் செயல் பாட்டை மாநில அளவிலான குழு கண்காணிக்கும். அவ்வப்போது, உரிய அறிவுறுத்தல்களை மாவட்டக் குழுக்களுக்கு வழங்கும். மேலும் தமிழ்நாடு வனத்துறையுடன் இணைந்து, யானைகள் மீட்பு மையம் மற்றும் யானை முகாம்களின் செயல்பாடுகளை ஆய்வு செய்யும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
பாதுகாப்பு அமைப்பு
குழு அமைக்கப்பட்டது தொடர் பாக ஓசை என்ற சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்பின் தலைவர் க.காளிதாசனிடம் கேட்டபோது, ‘‘வளர்ப்பு யானைகள் பராமரிப்பை கண்காணிக்க குழு அமைக்கப்பட் டது வரவேற்கத்தக்கது. யானையை நாம் வளர்த்தாலும், அது வன உயிரினமே. முதுமலை யானை கள் காப்பகங்களில் வழங்குவது போன்று கோயில் யானைகளுக்கு உணவுகள் வழங்கப்படுவதில்லை. படையல் உணவுகள்தான் வழங்கப் படுகின்றன. யானைகள் இயல்பாக வனப் பகுதியில் தொடர்ந்து நடந்து கொண்டிருப்பவை. மேலும் பல யானைகள் காசநோயால் இறந்திருப்பது தெரியவருகிறது. இதுபோன்ற நோய் பாதிப்புக்கு உள்ளான யானைகளிடம் ஆசிர்வாதம் பெறும், குழந்தைகள் உள்ளிட்ட மனிதர்களுக்கும் நோய் பரவ வாய்ப்புள்ளது.
எனவே, வளர்ப்பு யானைகளுக்கு, அவை வனங்களில் உண்ணும் இயற்கையான உணவுகளை வழங்க வேண்டும். தினமும் நடக்கச் செய்ய வேண்டும். கால் நடை மருத்துவர்களை நியமித்து, 15 நாட்களுக்கு ஒருமுறை யானை களை பரிசோதித்து அரசுக்கு அறிக்கை அளிக்க வேண்டும். இதை வளர்ப்பு யானைகள் நலக் குழு உறுதி செய்ய வேண்டும்’’ என்றார்.