

மருத்துவ மேற்படிப்பில் இட ஒதுக்கீடு விவகாரத்தில் கிராமப்புற அரசு மருத்துவர்களுக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு கிடைக்கச் செய்யும் வகையில் மத்திய அரசு நாடாளுமன்றத்தில் ஒரு மசோதா கொண்டு வந்து நிறைவேற்ற வேண்டும் என்று திமுக செயல் தலைவர் ஸ்டாலின் கூறியுள்ளார்.
ஸ்டாலின் இன்று சென்னை, டி.எம்.எஸ். வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் அரசு மருத்துவர்களை நேரில் சந்தித்து, அவர்களது போராட்டத்துக்கு திமுக சார்பில் ஆதரவு தெரிவித்தார்.
அதனைத்தொடர்ந்து, செய்தியாளர்களிடம் ஸ்டாலின் கூறியதாவது:
மருத்துவ மேற்படிப்புக்கான இடஒதுக்கீடு ரத்து செய்யப்பட்டதை கண்டித்து கடந்த 8 தினங்களாக அரசு மருத்துவர்கள் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டுக் கொண்டு இருக்கிறார்கள். தமிழகம் தழுவிய போராட்டமாக நடந்து கொண்டிருக்கிறது.
இரண்டு வருடங்கள் கிராமப்புறப்பகுதிகளில் பணியாற்றுபவர்களின் இட ஒதுக்கீட்டை உச்ச நீதிமன்றம் ரத்து செய்திருக்கிறது. எனவே, ரத்து செய்யப்பட்டு இருக்கக்கூடிய சட்டத்தை மத்திய அரசு நாடாளுமன்றத்தில் ஒரு மசோதாவாகக் கொண்டு வந்து நிறைவேற்றினால்தான் இதற்கொரு பரிகாரம் காண முடியும். இதுபற்றி இங்கிருக்கக்கூடிய மாநில அரசு மத்திய அரசுக்கு அழுத்தமாக எடுத்துச் சொல்ல வேண்டும்.
ஆனால், இன்றைக்கு மாநில அரசைப் பொறுத்தவரையில் அதற்கான முயற்சியில் ஈடுபட முடியாத நிலையிலே இருக்கிறது. ஏற்கெனவே, சட்டப்பேரவையில் நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று எல்லா கட்சிகளும் ஒருங்கிணைந்து ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றி அதை மத்திய அரசுக்கு குறிப்பாக, குடியரசுத் தலைவருக்கு நாம் அனுப்பி வைத்திருக்கிறோம். ஆனால், அனுப்பி வைத்திருக்கிறோமே தவிர அதற்கான கையெழுத்தையும், அனுமதியையும் இன்னமும் குடியரசுத் தலைவரிடம் இருந்து பெற முடியாத நிலையிலேதான் இங்கே இருக்கக்கூடிய மாநில அரசு இருந்து கொண்டிருக்கிறது.
காரணம், அவர்கள் ஆட்சியை எப்படி காப்பாற்றிக் கொள்வது. பதவியிலே எப்படி ஒட்டிக் கொண்டிருப்பது, தொடர்ந்து ஆறாண்டு காலமாக இந்த தமிழகத்தை குட்டிச்சுவராகி இருக்கக்கூடிய நிலையில், அதை எப்படி தொடர்வது என்ற நிலையிலேதான் இங்கே இருக்கக்கூடிய ஆட்சி இருந்து கொண்டிருக்கிறது.
ஆகவே, உடனடியாக இந்தத் தீர்ப்பை எதிர்த்து மேல் முறையீடு செய்வதோடு மருத்துவ மேற்படிப்புகளில் அரசு விதிகளின்படி அரசு மருத்துவர்களை சேர்க்கவும், அவர்களுக்கு அளிக்கப்பட்டு வரும் 50 சதவிகித இட ஒதுக்கீட்டை உறுதி செய்யவும் மத்திய அரசு இதில் தலையிட வேண்டும், அதற்குரிய அழுத்தத்தை மாநில அரசு வழங்கிட வேண்டும்.
ஆகவே, இதையெல்லாம் வலியுறுத்தித்தான் மருத்துவர்கள் கடந்த 8 நாட்களாக இந்தப் போராட்டத்தை நடத்திக் கொண்டு இருக்கிறார்கள்.
நீட் தேர்வில் தமிழக அரசு பின்தங்கி உள்ள நிலையில் மருத்துவர்களும் போராடிக் கொண்டிருக்கிறார்கள். இதுதொடர்பாக இந்திய பிரதமருக்கு தமிழக முதல்வர் கடிதம் எழுதினால் மட்டும் போதாது. நேரடியாகப் போய் முறையிட்டு அழுத்தம் கொடுக்க வேண்டும். இப்போது கூட டெல்லி சென்றபோது, நிதி ஆயோக் பற்றி மட்டுமே பேசி விட்டு வந்தாரே தவிர, மக்கள் பிரச்சினைகள் குறித்து பேசியதாக செய்திகள் எதுவும் வரவில்லை.
இதுபற்றி எல்லாம் இப்போது பேசுவதற்கு, பேச்சுவார்த்தை நடத்துவதற்கு அவருக்கு நேரமில்லை, வாய்ப்பு இல்லை. இப்போது அவருடைய பேச்சுவார்த்தை எல்லாம் இரண்டு அணிகளாக இருக்கக் கூடியவர்கள் ஒரு அணியாக சேர்வதில்தான் இருக்கிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.