

மதுரையிலிருந்து சென்னை வழியாக டெல்லிக்கு புதிய விமான சேவையை இண்டிகோ தனியார் நிறுவனம் நேற்று தொடங்கியது.
மதுரை விமான நிலையத்தில் இருந்து இந்தியன் ஏர்லைன்ஸ், ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் உட்பட 3 தனியார் விமான சேவை செயல்படுகிறது. இதன்மூலம் சென்னை உட்பட பல்வேறு நகரங்களுக்கு விமானங்கள் இயக்கப்படுகின்றன. ‘இண்டிகோ’ என்ற தனியார் விமான சேவை நிறுவனம் சார்பில், மதுரை- டெல்லிக்கு நேற்று விமான சேவை தொடங்கப்பட்டது. இதற்கான தொடக்க விழா மதுரை விமான நிலையத்தில் நடந்தது. மாவட்ட ஆட்சியர் கொ.வீரராகவராவ் தொடங்கிவைத்தார்.
தினமும் மதுரை- சென்னை வழியாக டெல்லிக்கும், மறு மார்க்கத்தில் டெல்லி- மதுரைக்கும் இயக்கப்படுகிறது. இந்நிறுவனத்தின் உள்நாட்டு விமான சேவையில் மதுரை 37-வது வழித்தடம். இப்புதிய விமானம் தினமும் காலை 8.25 மணிக்கு டெல்லியில் இருந்து புறப்பட்டு, 11.15க்கு சென்னை வந்தடைகிறது. சென்னையில் இருந்து 11.45 மணிக்கு புறப்பட்டு மதியம் 12.50க்கு மதுரை வருகிறது. மறு மார்க்கமாக மதுரையில் இருந்து மதியம் 1.20 மணிக்கு புறப்படும் விமானம் சென்னைக்கு 2.25-க்கும், அங்கிருந்து 30 நிமிடத்துக்கு பின் புறப்பட்டு டெல்லியை மாலை 6.10-க்கும் சென்றடைகிறது.
டெல்லி- மதுரைக்கு ஒரு பயணிக்கு ரூ.5,800 கட்டணம். சென்னையில் இருந்து மாலை 6.25 மணிக்கு புறப்படும் விமானம் 7.30-க்கு மதுரை வந்தடைகிறது. இந்த சேவை சென்னை- மதுரை வரை மட்டுமே.
மதுரையில் இருந்து இரவு 8 மணிக்கு புறப்படும் விமானம் 9.15-க்கு சென்னை செல்கிறது. பின்னர் 9.40-க்கு புறப்பட்டு 12 மணிக்கு புனே செல்கிறது. மதுரை-புனேவுக்கு ரூ.6,700 கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. முன்பதிவை பொறுத்து கட்டணம் வித்தியாசப்படும். மதுரை- சென்னை இடையே மட்டும் குறைந்தபட்ச கட்டணம் ரூ.1,499 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும், மார்ச் 26 முதல் மதுரை- ஹைதராபாத் நகருக்கு இந்நிறுவனம் சேவையை தொடங்க உள்ளது என, இண்டிகோ விமான சேவை நிறுவன அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதுகுறித்து இண்டிகோ நிறுவன தலைவர் ஆதித்ய கோஷ் கூறும்போது, ‘‘புனித யாத்திரை தலம், கலாச்சார மையம் என்ற வகையில் உலகம் முழுவதும் இருந்து சுற்றுலாப் பயணிகள் மதுரைக்கு வருகின்றனர். மதுரையை எங்களது சேவை வலையமைப்பில் இணைப்பதில் பெருமை. சென்னை- சிங்கப்பூர், கொச்சி-ஹைதராபாத், ஹைதராபாத்- சென்னை, சென்னை- சண்டிகர் வழித்தடங்களில் எங்கள் விமான சேவை உள்ளது. மேலும், சர்வதேச அளவில் சார்ஜாவுக்கு 2 நேரடி விமான சேவை மற்றும் மஸ்கட்டுக்கு கூடுதல் விமான சேவையை அறிமுகப்படுத்தி உள்ளோம்.
வெளிநாடு செல்வோர் கொண்டுசெல்லும் பொருட்களுக்கு (லக்கேஜ்) நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தை தவிர்த்து, கூடுதலாக கொண்டுசெல்லும் 8 கிலோ வரை ரூ.500, 15 கிலோ வரை ரூ.850, 30 கிலோவுக்கு ரூ.1,500 என, கட்டணம் வசூலிக்கப்படும். பிற விமானங்களைவிட இதில் சலுகை உள்ளது” என்றார்.
நிகழ்ச்சியில் மதுரை விமான நிலைய இயக்குநர் வி.வி.ராவ், இண்டிகோ விமான சேவை தகவல் தொடர்பு இயக்குநர் அஜய் சாஸ்ரா, விற்பனை பிரிவு அலுவலர் சந்திரசேகர் பங்கேற்றனர்.