

வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுமண்டலத்தால் காவிரி டெல்டா மாவட்டங்களில் நேற்று பலத்த மழை பெய்தது. இதையொட்டி, நாகை, தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டது.
நாகப்பட்டினம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் பலத்த மழை பெய்து வருகிறது. கடந்த ஆண்டு வடகிழக்குப் பருவமழை பெய்யாத வேதாரண்யம், தலைஞாயிறு பகுதிகளில் கடந்த 2 நாட்களாக அதிக மழை பெய்து வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். வேதாரண்யத்தில் நேற்று கனமழை பெய்தது. இதனால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. அதிகபட்சமாக இங்கு 126.6 மி.மீ. மழை பதிவாகியுள்ளது.
இதேபோல தஞ்சாவூர், திருவாரூர், திருச்சி மாவட்டங்களிலும் நேற்று அதிகாலை 5 மணி முதல் மதியம் 1 மணி வரை பரவலாக மழை பெய்தது. பலத்த மழையால் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியது. புதுக்கோட்டை மாவட்டத்திலும் நேற்று பரவலாக மழை பெய்தது.