Published : 02 Aug 2016 07:07 AM
Last Updated : 02 Aug 2016 07:07 AM

தொண்டு நிறுவனங்கள் நடத்தும் குழந்தைகள் காப்பகங்கள் பதிவு செய்யாவிட்டால் ஓராண்டு சிறை: தமிழக அரசு அறிவிப்பு

தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் நடத்தும் குழந்தைகள் காப்பகங்கள் பதிவு செய்யப்படாவிட்டால், ஓராண்டு சிறை அல்லது ரூ. 1 லட்சம் அபராதம் விதிக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

இது தொடர்பாக நேற்று வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு:

தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் நடத்தும் குழந்தைகள் காப்பகங்கள் இளைஞர் நீதி பராமரிப்பு மற்றும் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட வேண்டும். தவறினால், ஓராண்டு சிறை அல்லது ரூ.1 லட்சத்துக்கும் குறையாத அபராதம் அல்லது இரண்டுமோ விதிக்கப்படும். விவரங்களுக்கு சமூக பாதுகாப்புத்துறை இயக்குனரை அணுக வேண்டும். மேலும் 044- 26427022, 26426421 என்ற தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

வளர்ப்பு பராமரிப்பு பெற்றோர் பதிவு செய்யப்பட்ட குழந்தைகள் இல்லங்களில் உள்ள தத்துக் கொடுப்பதற்கு இயலாத நிலையில் உள்ள குழந்தைகள் மற்றும் பெற்றோர் பராமரிப்பு செய்ய இயலாத நிலையில் குழந்தைகள் இல்லங்களில் தங்கும் குழந்தைகள் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு பிரிவு மூலம் கண்டறியப்பட்டுள்ளனர்.

இக்குழந்தைகளை குடும்பச் சூழலில் வளர்க்க வளர்ப்பு பராமரிப்பு பெற்றோர் தேவைப்படு கின்றனர். சொந்த குழந்தைகள் உள்ளோர், தத்து எடுக்க உரிய தகுதிகள் இருந்து பதிவு செய்து காத்திருப்போர், குழந்தைகள் இல்லாதவர் என குழந்தைகள் நலனில் அக்கறை கொண்டவர்கள் வளர்ப்பு பராம ரிப்பு பெற்றோராக கருதப்படுகி்ன் றனர்.

இவர்கள் குழந்தைகளை தங்கள் பராமரிப்புக்கு கொண்டு சென்று, பாதுகாப்பு மற்றும் உரிய நடைமுறைகளை பின்பற்றி குழந்தைகளை வளர்க்கலாம். சமுதாயத்தில் உள்ள குழந்தைக ளின் பெற்றோரால், பராமரிப்பு செய்ய இயலாத நிலையில் அல்லது பெற்றோர் இன்றி தவிக்கும் குழந்தைகளை வளர்ப்பு பராமரிப்பு பெற்றோர் நிலை யில் பராமரிக்க தயாராக இருப்ப வர்கள் நேரடியாக அந்தந்த மாவட்டத்தில் உள்ள குழந்தைகள் நலக்குழு தலைவர், உறுப்பினர் மற்றும் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு பிரிவை அணுகலாம். வளர்ப்பு பராமரிப்பு காலங்களில் குழந்தைகள் பாதுகாப்பு திட்டத் தின் மூலம் வளர்ப்பு பராமரிப்பு பெற்றோருக்கு குழந்தைக்கு ரூ.2 ஆயிரம் வீதம் உதவித்தொகை வழங்கப்படுகிறது. இத்திட்டத்தில் இருக்கும் குழந்தைகள் குறுகிய காலம் அல்லது நீண்டகாலம் அல்லது குழந்தையின் 18 வயது முடியும் வரை வளர்ப்பு பராமரிப்பு பெற்றோருடன் இருக்க அனுமதிக்கப்படும். விண்ணப்பம், நிபந்தனைகள், நடைமுறைகளை அந்தந்த மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகங்களை நேரில் தொடர்பு கொண்டு அறிந்து கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x