Published : 26 Nov 2014 09:53 AM
Last Updated : 26 Nov 2014 09:53 AM

ரியல் எஸ்டேட் அதிபர் கொலையில் திருப்பம்: உயர் நீதிமன்ற வழக்கறிஞர் கைது

மதுரை ரியல் எஸ்டேட் அதிபர் கொலை வழக்கில் உயர் நீதிமன்ற வழக்கறிஞர் ஒருவரை சிபிஐ போலீஸார் நேற்று கைது செய்தனர்.

மதுரை சின்னசொக்கிகுளத்தை சேர்ந்தவர் ஜமால்முகமது, மதுரை கே.எம்.அலாவுதீன் ராவுத்தர் தர்ம அறக்கட்டளை அறங்காவலராக இருந்தார். இந்த அறக்கட்டளைக்கு சொந்தமாக மதுரை புது ஜெயில் ரோட்டில் உள்ள நிலம் திமுக முன்னாள் அமைச்சர் ஐ.பெரியசாமியின் மகள் இந்திரா உள்பட பலரது பெயருக்கு பத்திரப்பதிவு செய்யப்பட்டது.

இந்நிலையில், ஜமால்முகமது கொலை செய்யப்பட்டார். முனிச்சாலையை சேர்ந்த சங்கர் என்பவர் மேலூர் நீதிமன்றத் தில் சரண் அடைந்து ஜமால்முகமது கொலை செய்யப்பட்டதாகக் கூறியதால் இந்த விவகாரம் வெளியே தெரியவந்தது.

இக்கொலை தொடர்பாக திருப்பரங்குன்றம் பூங்கொடி, ஜெயில் ரோடு கணேசன், கரடி அப்பாஸ், கூடல்புதூர் சித்திக், மாரிமுத்து, முன்னாள் அமைச்சர் ஐ.பெரியசாமி மகள் இந்திரா, பழனிவேலு, உமாராணி உட்பட 14 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களில் இந்திரா உள்பட 3 பேருக்கு உயர் நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது.

இந்நிலையில் ஜமால்முகமது கொலை வழக்கை சிபிஐக்கு மாற்றக்கோரி, அவரது மனைவி உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்தார். ஜமால்முகமது உறவினர்கள் பலரும் சிபிஐ விசாரணை கேட்டு உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இந்த மனுக்களை விசாரித்த உயர் நீதிமன்றம், ஜமால்முகமது கொலை வழக்கை சிபிஐ-க்கு மாற்றி உத்தரவிட்டது.

இந்நிலையில் இந்தக் கொலை வழக்கில் உயர் நீதிமன்ற வழக்கறிஞர் மகேந்திரவர்மனை சிபிஐ போலீஸார் நேற்று கைது செய்தனர். அவரை மதுரை தலைமை நீதித்துறை நடுவர் ராஜசேகரன் முன் நேற்று ஆஜர்படுத்தினர். சிபிஐ தரப்பில் வழக்கறிஞர் நாகேந்திரன் வாதிட்டார்.

பின்னர் மகேந்திரவர்மனை 15 நாளில் சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதனிடையே, வழக்கறிஞர் மகேந்திரவர்மனை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதிகோரி சிபிஐ தரப்பில் இன்று மனு தாக்கல் செய்யப்படுகிறது. அவரை காவலில் எடுத்து விசாரித்தால் இந்த வழக்கில் மேலும் பலர் சிக்குவர் எனத் தெரிகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x