

வழக்கறிஞர் சட்டத்தில் கொண்டு வரப்பட்டுள்ள புதிய திருத்தங்களை திரும்பப்பெற வலியுறுத்தி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர்கள் வாயில் கருப்புத் துணி கட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர். இன்று நகல் எரிப்பு மற்றும் உண்ணாவிரதம் இருக்க முடிவு செய்துள்ளனர்.
சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர் சங்கத்தினர், உயர் நீதிமன்ற பெண் வழக்கறிஞர் சங்கத் தினர் மற்றும் ‘லா அசோசியேஷன்’ சார்பில் மூன்றாம் நாளான நேற்று வாயில் கருப்புத் துணி கட்டி கோஷம் எழுப்பியவாறு நீதிமன்ற வளாகத்திற்குள் வலம் வந்தனர்.
வழக்கறிஞர் சங்கச் செயலாளர் அறிவழகன் கூறுகையில்,
‘‘வழக்கறிஞர்கள் தங்களது போராட்டத்தைக் கைவிட்டு பணிக்கு திரும்ப உயர் நீதிமன்றம் வேண்டு கோள் விடுத்துள்ளது. ஆனால் புதிய சட்ட திருத்தங்களை திரும்பப் பெறும் வரை எங்களது போராட்டம் ஓயாது. இன்று நகல் எரிப்பு போராட்டத்தில் ஈடுபட உள்ளோம். அதைத்தொடர்ந்து உண்ணாவிரதம் இருக்கவுள்ளோம். இதில் பல்வேறு அரசியல் கட்சியினர் பங்கேற்கவுள்ளனர்’’ என்றார்.