Published : 07 Jun 2017 09:30 AM
Last Updated : 07 Jun 2017 09:30 AM

பெண் வழக்கறிஞர் முகநூல் பக்கத்தில் ஆபாச படம்: ஹசீனா சையதுக்கு எதிரான வழக்கில் இறுதி அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு

பெண் வழக்கறிஞரின் முகநூல் பக்கத்தில் ஆபாச படங்களை பதிவிட்டதாக மகளிர் காங்கிரஸ் பிரமுகர் ஹசீனா சையதுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில், 4 வாரங்களில் இறுதி அறிக்கை தாக்கல் செய்ய போலீஸாருக்கு சென்னை உயர் நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது.

சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணிபுரிபவர் செல்வி பிரபு(42). இவர் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், ‘எனது முகநூல் பக்கத்தில் மகிளா காங்கிரஸ் பிரமுகரான ஹசீனா சையது நண்பரானார். அவருடன் சேர்ந்து அவரது சகோதரர் உமர் உள்ளிட்ட இதர நண்பர்களும் எனக்கு முகநூல் மூலமாக அறிமுகமாயினர். இந்நிலையில் எனது முகநூல் பக்கத்தில் திடீரென ஆபாச படங்களை அவர்கள் பதிவிட்டனர்.

அதைத் தட்டிக்கேட்டபோது எனது நடத்தைப் பற்றி தவறான தகவல்களை பரப்பியதோடு, எனது புகைப்படத்தை வேறு ஒருவருடன் சேர்த்து முகநூலில் பரப்பினர். இதுதொடர்பாக குமரன் நகர் போலீஸில் புகார் செய்தபோது, போலீஸார் முன்னிலையிலேயே ஹசீனா சையதும், அவரது தம்பி உமரும் எனக்கு கொலை மிரட்டல் விடுத்தனர். போலீஸார் கடந்த பிப்ரவரி மாதம் வழக்குப் பதிவு செய்தும் இதுவரையிலும் எந்த முன்னேற்றமும் இல்லை. எனவே அந்த வழக்கை விரைந்து விசாரிக்க உத்தரவிட வேண்டும்’ என கோரியிருந்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஆர்.மகாதேவன், 4 வாரங்களுக்குள் இறுதி அறிக்கை தாக்கல் செய்ய குமரன் நகர் போலீஸாருக்கு உத்தரவிட்டு விசாரணையைத் தள்ளி வைத்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x