

கடந்த 2010-ம் ஆண்டு கர்நாடக அரசின் சமையல் அறை உபகரணங்களுக்கான டெண்டரைப் பெற்றுத்தருவதாகக் கூறி ரூ.2.43 லட்சம் மோசடி செய்ததாக, பெங்களூருவைச் சேர்ந்த சுகேஷ், அவரது தந்தை சந்திரசேகர் ஆகியோர் மீது கோவையைச் சேர்ந்த ராஜவேலு என்பவர் போலீஸில் புகார் அளித்தார். இந்த வழக்கு கோவை ஜேஎம் 2 நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது.
இதனிடையே, இந்த வழக்கில் தலைமறைவான சுகேஷ், இரட்டை இலை சின்னம் பெற தேர்தல் ஆணையத்துக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் கைதானார். இதைத் தொடர்ந்து, மோசடி வழக்கில் கடந்த 9-ம் தேதி கோவை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட சுகேஷை, 22-ம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.
நேற்று அவர் மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அவரது தந்தை சந்திரசேகர் ஆஜராகவில்லை. அப்போது, சுகேஷின் நீதிமன்றக் காவலை ஜூலை 6-ம் தேதி வரை நீட்டித்து நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து, சுகேஷ், டெல்லிக்கு ரயிலில் அழைத்துச் செல்லப்பட்டார்.