

மீண்டும் ஒரு கூவத்தூரா? மீண்டும் நம்பிக்கை வாக்கெடுப்பா ?
டிசம்பர் 5, 2016க்கு பிறகு தொடங்கிய அரசியல் நிலையற்ற சூழல் தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதிமுகவுக்குள் அதிகாரப் போட்டியும், குழப்பம் வரும் போதெல்லாம் உடனே எழுப்பபடும் கேள்வி இந்த ஆட்சி நீடிக்குமா? ஆளுநர் ஆட்சியை கலைப்பாரா என்பது தான்?
மிக சொற்பமான இடங்களிலேயே பெரும்பான்மையை பெற்றுள்ள அஇஅதிமுகவின் ஆட்சி நீடிப்பதற்கு 117 சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவு தேவை. பன்னீர் செல்வம் பிரிந்து சென்ற பிறகு சட்டமன்றத்தில் நடைபெற்ற நம்பிக்கையில்லா தீர்மானம் மீதான வாக்கெடுப்பில் 122 சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவை பெற்று வெற்றி பெற்றார் எடப்பாடி பழனிச்சாமி. அத்தோடு குழப்பங்கள் தீர்ந்தது என்று எண்ணியிருந்த நிலையில் நடந்த சம்பவங்கள் மீண்டும் தலை கீழ் நிலைமைக்கு கொண்டு வந்து நிறுத்தியுள்ளன. ஆர்கேநகர் தேர்தல், தினகரன் போட்டி, பண வேட்டை, தேர்தல் தடை, விஜயபாஸ்கர் வீட்டில் வருமான வரி சோதனை, இறுதியாக தினகரன் மீது லஞ்சம் கொடுத்ததாக முதல் தகவல் அறிக்கையும், நேற்று இரவு தினகரன் மற்றும் சசிகலாவிற்கு எதிராக அமைச்சர்கள் அனைவரும் போர்க்கொடி தூக்கியிருப்பதும் கால வரிசைப்படியிலான நிகழ்வுகள். சசிகலா ஆதரவு அணி ஓபிஎஸ் ஆதரவு அணி என இரண்டு அணிகளாக இருந்த அதிமுக தற்போது மூன்று அணியாக மாறி இருக்கிறது.
தற்போதைய தகவலின்படி சட்டமன்ற உறுப்பினர்கள் தங்க தமிழ்செல்வன், ஜக்கையன், வெற்றிவேல், கதிர்காமு ராமகிருஷ்ணன்,செல்வ மோகன்தாஸ்,ஏழுமலை,சின்னதம்பி ஆகிய 8 எம்எல்ஏக்கள் தினகரனுக்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுத்துள்ள நிலையில் எடப்பாடி ஆதரவு எம்எல்ஏக்களின் எண்ணிக்கை 114 ஆக குறைந்துள்ளது. இருப்பினும் ஓபிஎஸ் ஆதரவில் உள்ள 10 சட்டமன்ற உறுப்பினர்கள் ஆதரவு தெரிவிக்கும் நிலையில் ஆட்சியை தக்க வைக்க முடியும்.
அஇஅதிமுகவில் நடைபெற்று வரும் நிகழ்வுகள் குறித்து தி இந்து தமிழ் இணையதளத்திடம் பேசிய மூத்த பத்திரிக்கையாளர் மணி, “ தற்போதைய குழப்பங்களால் ஆட்சி கவிழ்வதற்கான வாய்ப்புகள் மிக குறைவாகவே உள்ளன, ஜெயலலிதா போன்ற தலைவர் ஒருவர் இல்லாத நிலையில் ஏற்பட்டுள்ள சிக்கலை தீர்க்க அமைச்சர்கள் குழுவாக இணைந்து செயல்படுவதாக எடுத்துள்ள முடிவின் காரணம் ஒன்று மட்டும் அது ஆட்சியும் அதிகாரமும், அஇஅதிமுகவில் உள்ள கடைக்கோடி தொண்டன் முதல் மூத்த அமைச்சர் வரை ஆட்சியை விட்டு விட துணிய மாட்டார்கள், அதற்கான அடிப்படையே, இரு பிரிவும் இணைய வேண்டும் என்கிற கருத்துக்கு இழுத்து வந்து நிறுத்தியுள்ளது. ஆனால் அதன் நிச்சயதன்மை என்பது கேள்விக்குறியான ஒன்று தான், இப்போதைக்கு தப்பித்தாலும் அடுத்த சில மாதங்களுக்குள் மீண்டும் ஒரு புது குழப்பம் ஏற்படுவதற்கான அனைத்து உள் முரண்பாடுகளுடன் அதிமுக பயணித்து வருகிறது என்றார். கட்சியிலிருந்து ஒதுங்குகிறேன் என்று தினகரன் கூறியிருந்தாலும், அவர் அப்படியே இருந்து விடுவாரா? அவருக்கு ஆதரவு தெரிவித்த சட்டமன்ற உறுப்பினர்களின் நிலை என்னவாகும் ? என்கிற கேள்விகள் எழுந்துள்ள நிலையில் சட்டப்பேரவையை உடனே கூட்ட எதிர்கட்சி தலைவர் ஸ்டாலின் கோரியிருக்கிறார். மீண்டும் ஒரு நம்பிக்கை வாக்கெடுப்பா? மீண்டும் கூவத்தூரா? அடுத்த சில நாட்களுக்கு தமிழக அரசியல் களம் விறுவிறுப்புடன் தான் செல்லப் போகிறது….