

வங்கக்கடலில் 8 நாட்களாக தீவிரமாக தேடியும், மாயமான விமானம் குறித்து எந்த தகவலும் கிடைக்கவில்லை. விமானத்தை தேடுவதற்காக அதிநவீன வசதிகள் கொண்ட ‘சாகர்நிதி’ கப்பல் மொரீஷியஸில் இருந்து ஒரு வாரத்துக்குள் சென்னை வர உள்ளது.
சென்னை தாம்பரத்தில் உள்ள இந்திய விமானப் படை தளத்தில் இருந்து ஏஎன்-32 வகை விமானம் கடந்த 22-ம் தேதி காலை அந்தமான் தலைநகர் போர்ட்பிளேருக்கு புறப்பட்டது. அதில் 6 விமானிகள் உட்பட 29 பேர் இருந்தனர். சென்னையில் இருந்து 151 நாட்டிகல் மைல் தொலைவில் வங்கக்கடல் பகுதியில் 23 ஆயிரம் அடி உயரத்தில் பறந்தபோது, திடீரென விமானத்தின் தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டது. ரேடார் கருவியின் கண்காணிப்பில் இருந்தும் விமானம் மாயமானது.
வங்கக்கடலில் விமானம் விழுந் திருக்கலாம் என சந்தேகிக்கப்பட்டு, கடலில் விமானத்தை தேடும் பணி 8 நாட்களாக தீவிரமாக நடந்து வருகிறது. இப்பணியில் 13 கடற்படை கப்பல்கள், 4 கடலோர காவல்படை கப்பல்கள், கடற்படை நீர்மூழ்கிக் கப்பல் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. தேடுதல் பணி நடக்கும் இடத்தில் விமான பாகங்கள் ஏதாவது தென்பட்டால் உடனடியாக தெரிவிக்கும்படி, அந்த வழியாக செல்லும் வர்த்தக கப்பல்களிடமும் கோரப்பட்டுள்ளது. செயற்கைக் கோள் உதவியோடும் தேடுதல் பணி முடுக்கிவிடப்பட்டுள்ளது.
கடலில் இருந்து 22 பொருட்கள் சேகரிக்கப்பட்டுள்ளன. ஆனால், மாயமான விமானத்துக்கும் அவற்றுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று ஆய்வில் தெரியவந்தது. விமானம் மற்றும் அதில் பயணம் செய்தவர்கள் பற்றி இதுவரை உறுதியான தகவல் எதுவும் கிடைக்கவில்லை. இதனால் விமானத்தில் சென்ற 29 பேரின் குடும்பத்தினர் மிகுந்த கவலையில் உள்ளனர்.
இதற்கிடையே, விமானத்தை தேடும் பணியில் தேசிய கடல் ஆராய்ச்சி தொழில்நுட்ப நிறுவனத்துக்கு (‘நியாட்’) சொந்தமான அதிநவீன வசதிகள் கொண்ட ‘சாகர்நிதி’ என்ற கப்பலை ஈடுபடுத்த முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. மொரீஷியஸ் தீவு பகுதியில் இருந்து இக்கப்பல் நேற்று சென்னை வர இருந்தது. வானிலை மோசமாக இருப்பதால் தற்போது அரபிக்கடல் பகுதியில் நிறுத்தப்பட்டுள்ளது. வரும் ஆகஸ்ட் 10-ம் தேதிக்குள் இக்கப்பல் சென்னை வந்துவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மாயமான விமானம் கடலில் சுமார் 13 ஆயிரம் அடி ஆழத்தில் விழுந்து கிடக்கலாம் என்று கூறப்படுகிறது. ‘சாகர் நிதி’ கப்பலில் உள்ள அதிநவீன கருவிகளைக் கொண்டு ஆழ்கடலில் தேடும்போது, மாயமான விமானத்தில் இருந்து சிக்னல்கள் கிடைக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. அவ்வாறு சிக்னல் கிடைத்தால் தேடுதல் பணியில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்படும் என்று கடற்படை அதிகாரிகள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.
இதுகுறித்து கடலோர காவல்படை செய்தித் தொடர்பாளர் ஷர்மா கூறும்போது, ‘‘மாயமான விமானத்தை தேடும் பணி முழுவீச்சில் நடந்து வருகிறது. இருப்பினும் விமானம் பற்றிய தகவல் எதுவும் இதுவரை கிடைக்கவில்லை’’ என்றார்.
இதற்கிடையில், மாநிலங் களவையில் பாதுகாப்பு துறை அமைச்சர் மனோகர் பாரிக்கர் கூறும்போது, ‘‘மாயமான விமா னத்தை தேடும் பணியை தனிப்பட்ட முறையில் கண்காணித்து வருகி றேன். அந்த விமானத்தில் பாதுகாப்பு குறைபாடுகள் எதுவும் இல்லை. விமானம் காணாமல் போனதற்கு நாசவேலை காரணமாக இருக்க வாய்ப்பு குறைவு’’ என்றார்.