Last Updated : 27 Jun, 2016 06:01 PM

 

Published : 27 Jun 2016 06:01 PM
Last Updated : 27 Jun 2016 06:01 PM

தான் படித்த பள்ளியில் முதல்வர் நாராயணசாமி ஆய்வு: வளாகத்தில் சிதறிக் கிடந்த மதுபாட்டில்கள்

முதல்வர் நாராயணசாமி தான் படித்த அரசு பள்ளியில் இன்று ஆய்வு நடத்தினார். பள்ளி வளாகத்தில் மதுப்பாட்டில்கள் கிடந்ததையடுத்து, மதில்சுவர்களை உயர்த்தி கட்டி வெளியாட்கள் நுழையாதவாறு நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.

அரியாங்குப்பம் தந்தை பெரியார் அரசு மேல்நிலைப் பள்ளியில் முதல்வர் நாராயணசாமி இன்று ஆய்வு மேற்கொண்டார். அவருடன் கல்வி அமைச்சர் கமலக்கண்ணன், அரசுக் கொறடா அனந்தராமன், பள்ளிக் கல்வி இயக்குநர் எல்.குமார் மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர். ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களிடம் பள்ளியில் கல்வித் தரம் குறித்து கேட்டறிந்தார்.

பின்னர் வகுப்பறை, பள்ளியில் உள்ள அடிப்படை வசதிகள், வளாகத்தில் உள்ள மத்திய உணவுக் கூடம் உள்ளிட்டவற்றைப் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது மதிய உணவை சாப்பிட்டுப் பார்த்து தரத்தை ஆய்வு செய்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் முதல்வர் நாராயணசாமி கூறியதாவது:

"இது நான் படித்த பள்ளி, இங்கு தான் மேல்நிலைக் கல்வி பயின்றேன். இப்பள்ளியில் 10-ம் வகுப்பு வரை ஆங்கில வழியில் படிக்கிறார்கள். மேல்நிலைக் கல்வியில் ஆங்கில வழிக் கல்வி இல்லை. அதனால் மேல்நிலைக் கல்வியில் தமிழ்வழியில் கற்கின்றனர். 12ம் வகுப்பு முடித்த மாணவர்கள் அகில இந்திய அளவில் நடைபெறும் நுழைவுத் தேர்வுகளில் சிபிஎஸ்இ படித்த மாணவர்களோடு போட்டியிட சிரமமாக உள்ளது.

மாணவர்கள் விரும்பும் வகையில் தமிழ் அல்லது ஆங்கில வழியில் கற்க நடவடிக்கை எடுக்கப்படும். ஆசிரியர்கள் தனித்திறனை மேம்படுத்த அவர்களுக்கு சிறப்பு பயிற்சிகள் வழங்க கல்வித்துறை அதிகாரிகளிடம் அறிவுறுத்தி உள்ளேன்" என்றார் நாராயணசாமி.

முதல்வர் வருகையொட்டிதான் பள்ளி பெயர் பலகை, தண்ணீர் குழாய்கள் ஆகியவை சீரமைக்கப்பட்டதாக அங்கிருந்தோர் தெரிவித்தனர். பள்ளி வளாகத்தில் பல இடங்களில் மதுபாட்டில்கள் கிடந்தன.

பள்ளி வளாகத்தில் மதுபாட்டில்கள் கிடக்கிறதே என்று முதல்வரிடம் கேட்டதற்கு, "வெளியாட்கள் உள்ளே நுழைவது இதற்கு முக்கியக் காரணம். பள்ளியின் சுற்றுச்சுவர் உயர்த்தி கட்டப்படும். பாதுகாவலர்களையும் நியமிக்க உள்ளோம். இது நான் படித்த பள்ளி. கண்டிப்பாக சீரமைக்க நடவடிக்கை எடுப்போம்" என்றார்.

அரசு பள்ளிகளில் மாணவர்கள் எண்ணிக்கை குறைந்து வருவது தொடர்பாகவும் அவரிடம் கேட்டதற்கு, "தனியார் பள்ளிகள் மீது பெற்றோர்களுக்கு மோகமுள்ளதால் அதிக கட்டணம் வசூலித்தாலும் அங்கேயே தங்கள் குழந்தைகளை சேர்க்கின்றனர். அரசுப் பள்ளிகளின் தரத்தை உயர்த்தினால் மாணவர்கள் எண்ணிக்கை கண்டிப்பாக அதிகரிக்கும். தனியார் பள்ளிகளுக்கு நிகராக அரசு பள்ளிகளின் தரத்தை உயர்த்த பாடுபடுவோம்" என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x