யுவ புரஸ்கார் விருதை திருப்பி அளிக்கிறார் லஷ்மி சரவணகுமார்

யுவ புரஸ்கார் விருதை திருப்பி அளிக்கிறார் லஷ்மி சரவணகுமார்
Updated on
1 min read

ஜல்லிக்கட்டுக்கு சாதகமான ஒரு பதில் கிடைக்காத பட்சத்தில் சாகித்ய அகாடமியிலிருந்து வழங்கப்பட்ட யுவ புரஸ்கார் விருதை நாளை காலை பதினோரு மணிக்கு சென்னையில் இருக்கும் சாகித்ய அகாடமி அலுவலகத்தில் திரும்பத் தந்துவிடுவேன் என்று எழுத்தாளர் லஷ்மி சரவணகுமார் கூறியுள்ளார்.

இது தொடர்பாக இன்று அவர் முகநூலில் எழுதி வெளியிட்ட பதிவு:

''இந்த மொழி என் அடையாளம். இதை நேசிக்கிற ஒவ்வொருவரும் என் உறவுகளே. நீண்ட பல வருடங்களாய் தமிழ் சமூகம் தொடர்ந்து மத்திய அரசால் வஞ்சிக்கப்படுவது தொடர்ந்தபடிதான் இருக்கிறது. ஒவ்வொரு காலகட்டத்திலும் வெவ்வேறு பிரச்சினைகளுக்காக சிறு சிறு குழுக்களாக மக்கள் போராடினாலும் அந்தப் போராட்டங்கள் வெவ்வேறு அரசியல் காரணங்களால் மழுங்கடிக்கப்பட்டு விடுகின்றன.

இன்று மொத்த தமிழ் சமூகமும் திரண்டு தம் உரிமைக்காக குரல் கொடுப்பது தற்செயலானதாய் நடந்தது அல்ல. இது வெறுமனே ஜல்லிக்கட்டு பிரச்சினைக்கான போராட்டமும் அல்ல. நாங்கள் தொடர்ந்து ஒடுக்கப்படுகிறோம் என்பதன் அழுத்தத்தில் வெளிப்பட்டிருக்கும் கோவம்.

ஜல்லிக்கட்டை நடத்த உடனே அனுமதியளிக்க அவசர சட்டம் இயற்றவும், AwBI மற்றும் பீட்டாவை தடை செய்யவும் வலியுறுத்துவதோடு வஞ்சிக்கப்பட்ட எம் விவசாயிகளுக்கான நலனை உடனே மத்திய அரசு கவனத்தில் எடுக்க வேண்டும் என்பதையும் குறிப்பிட விரும்புகிறேன்.

இந்தப் பெருந்திரளான சமூக எழுச்சியில் கூட்டத்தில் ஒருவனாகவே என்னையும் உணர்கிறேன். இன்று மாலைக்குள் இணக்கமான எமக்கு சாதகமான ஒரு பதில் கிடைக்காத பட்சத்தில் சாகித்ய அகாடமியிலிருந்து வழங்கப்பட்ட யுவ புரஸ்கார் விருதை நாளை காலை பதினோரு மணிக்கு சென்னையில் இருக்கும் சாகித்ய அகாடமி அலுவலகத்தில் திரும்பத் தந்துவிடுவேன்.

இந்த மாபெரும் போராட்டம் அடுத்த தலைமுறையிடமிருந்து நல்ல தலைவர்களை உருவாக்கும் என்கிற சின்னதொரு நம்பிக்கை இருக்கிறது. அது வெற்றிகரமாக நடக்கட்டும்'' என்று லஷ்மி சரவணகுமார் கூறியுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in