Published : 16 Apr 2014 12:25 PM
Last Updated : 16 Apr 2014 12:25 PM

மீனவர்களை பழங்குடியினராக அறிவிக்க வேண்டும்: நரேந்திரமோடிக்கு மீனவப் பிரதிநிதிகள் கோரிக்கை

மீனவர்களை பழங்குடியினராக அறிவிக்க வேண்டும் என பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திரமோடிக்கு மீனவப் பிரதிநிதிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தென்மாவட்டங்களில் போட்டியிடும் பாரதீய ஜனதா கட்சி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து நாளை (வியாழக்கிழமை) பிரச்சாரம் செய்ய ராமநாதபுரம் வரும் பாஜகவின் பிரதமர் வேட்பாளர் நரேந்திரமோடி, மீனவ சமுதாயத்தினரின் கோரிக்கைகளை நிறைவேற்றித்தர வாக்குறுதி அளிக்க வேண்டும் என மீனவப் பிரதிநிதிகள் எதிர்பார்கின்றனர்.

கடந்த ஜனவரி 31 அன்று பாரதீய ஜனதா கட்சியின் தமிழக மீனவரணி சார்பில் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் சுஷ்மா ஸ்வராஜ் தலைமையில் கடல் தாமரைப் போராட்டம் பாம்பனில் நடைபெற்றது.

இதில் சுஷ்மா ஸ்வராஜ் பாஜக ஆட்சிக்கு வந்தால் மீன்வளத்துறை உருவாக்கி அதற்கு தனி மந்திரி நியமிக்கப்படுவார். மேலும் நரேந்திரமோடி பிரதமரானால் மீனவர்களின் பிரச்சினை தீர்க்கப்படும், என்றார்.

ஆனால் பாரதீய ஜனதா கட்சி வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கையில் தமிழக மீனவர் பிரச்னை குறித்து எந்த அறிவிப்பும் இல்லை. இதனால் தமிழக மீனவர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.

இந்நிலையில் ராமநாதபுரம் பிரச்சாரக் கூட்டத்தில் கலந்து கொள்ளும் நரேந்திரமோடி மீனவ சமுதாயத்தினரின் கோரிக்கைகளை நிறைவேற்றித்தர வாக்குறுதி அளிக்க வேண்டும், என மீனவப் பிரதிநிதிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

இதுகுறித்து 'தி இந்து' செய்தியாளரிடம் மீனவப் பிரதிநிதிகள் கூறியதாவது: "இந்தியாவில் 13 கடற்கரை மாநிலங்கள், 36 பிரதான நதிகள், ஆறுகள், ஏரிகள், குளங்கள், குட்டைகள் ஆகியவைகளையொட்டி 10 கோடிக்கும் மேலான மீனவ சமுதாய மக்கள் வாழ்ந்து வருகின்றனர்.

இந்தியா சுதந்திரம் பெற்றதில் இருந்து மத்திய அரசில் சிறிய அளவிலான பிரதிநிதித்துவம் கூட மீனவர்களுக்கு இல்லை. சுருங்கச் சொன்னால் ஒரு கேபினெட் அமைச்சர் பதவியில் கூட மீனவர் சமுதாயத்தை சார்ந்தவர்களுக்கு வழங்கப்பட்டதில்லை.

மத்திய அரசில் மீன்வளம் மற்றும் மீனவர் நல அமைச்சகம் ஏற்படுத்த வேண்டும், மண்டல் கமிஷன் பரிந்துரை அடிப்படையில் மீனவ சமுதாயத்தை பழங்குடியினராக அறிவிக்க வேண்டும், கலால் வரி, உற்பத்தி வரி, சேவை வரி, விற்பனை வரி போன்ற வரி விதிப்புகளில் இருந்து விதிவிலக்கு அளித்து மீனவர்களுக்கான டீசல் மற்றும் மண்ணெண்ணெய் ஆகியவற்றை மத்திய அரசின் அடக்க விலைக்கே வழங்க வேண்டும், இயற்கை பேரிடர் காரணமாக விவசாய கடன் தள்ளுபடி செய்யப்படும்போது, மீனவர் கடன்களும் தள்ளுபடி செய்யப்பட வேண்டும், அரசுடமை வங்கிகள் மூலம் மீனவர்களுக்கு ஆண்டு ஒன்றுக்கு 4 சதவீத வட்டிக்கு கடன் வழங்க வேண்டும் என்பதே மீனவர்களின் நெடுநாளைய கோரிக்கைகளாக உள்ளன.

இவற்றை பாஜக மத்தியில் ஆட்சியைப் பிடிக்குமானால் நிறைவேற்றித் தருவோம் என நரேந்திரமோடி, நாளையப் பிரச்சாரத்தில் வாக்குறுதியளிக்க வேண்டும் என எதிர்பார்கின்றோம்" என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x