

திருவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் ஆடிப்பூரத்தை முன் னிட்டு தேரோட்டம் நேற்று வெகு விமரிசையாக நடைபெற்றது.
திருவில்லிபுத்தூரில் ஆண் டாள் அவதார தினமான ஆடிப்பூரத் திருநாளைக் கொண்டாடும் விதமாக ஆடிப்பூர பெருவிழா ஆண்டுதோறும் கொண்டாடப் பட்டு வருகிறது.
இந்த ஆண்டு ஆடிப்பூர திருவிழா கொடியேற்றம் கடந்த 28-ம் தேதி நடைபெற்றது. இத்திருவிழா 12 நாட்கள் நடை பெறும். இதையொட்டி தினமும் சுவாமிகள் வெவ்வேறு வாகனங் களில் புறப்பாடாகி மண்டபங்களில் எழுந்தருளல் நடைபெற்று வருகிறது.
திருவிழாவின் 9-ம் நாளான நேற்று காலை தேரோட்டம் நடை பெற்றது. இதற்காக ஆண்டாள், ரெங்கமன்னார் ஆகியோருக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன. அதைத் தொடர்ந்து தேரோட்டம் தொடங்கியது. மாவட்ட ஆட்சியர் அ.சிவஞானம் வடம் பிடித்து தேரோட்டத்தைத் தொடங்கிவைத்தார்.
கோயிலைச் சுற்றி உள்ள நான்கு ரத வீதிகளிலும் ஆயிரக்கணக்கான பக்தர்களின் கோஷத்துடன் தேர் உலா வந்து மீண்டும் நிலையை அடைந்தது.
தேரோட்டத்தையொட்டி மாவட்ட நிர்வாகம் மற்றும் கோயில் நிர்வாகம் சார்பில் சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந் தன. தேரோட்டத்துக்காக உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டது. மாவட் டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து திருவில்லிபுத்தூருக்கு நேற்று சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட்டன.
தேரோட்டத்தைத் தொடர்ந்து ஆண்டாள் கோயிலில் முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா உட்பட ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.