Last Updated : 06 Aug, 2016 05:06 PM

 

Published : 06 Aug 2016 05:06 PM
Last Updated : 06 Aug 2016 05:06 PM

நாட்டிலேயே சிறந்தது சென்னையின் ஐசிஎப் தொழிற்சாலையே: மத்திய அமைச்சர் தகவல்

சென்னையில் உள்ள ஐசிஎப் ரயில்பெட்டி தொழிற்சாலை, நாட்டிலேயே சிறந்தது என மத்திய ரயில்துறை அமைச்சர் சுரேஷ் பிரபு கூறியுள்ளார். இது குறித்து திமுக உறுப்பினர் கனிமொழி நேற்று மாநிலங்களவையில் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையில் அவர் இதை தெரிவித்தார்.

இது குறித்து சுரேஷ் பிரபு தனது பதிலில் கூறியதாவது: சென்னையில் இருக்கும் ஐசிஎப் தொழிற்சாலை இந்திய ரயில்வே தொழிற்சாலைகளிலேயே சிறந்தது. ஐசிஎப் ஆலையை மேம்படுத்த அரசு தொடர்ந்து நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. நான் ஏற்கனவே குறிப்பிட்ட தீனதயாள் ரயில்பெட்டிகள் ஐசிஎப்பில்தான் தயாரிக்கப்படுகின்றன. மேலும், கனிமொழி எம்பி. குறிப்பிட்ட மாதிரி நாட்டின் ஒரு பாகத்துக்கு தரமான சேவை, இன்னொரு பாகத்துக்கு தரமற்ற சேவை என்ற பாரபட்சமெல்லாம் இல்லை. ரயில்வே ஒரு தாயைப்போல நாட்டின் அனைத்து பிள்ளைகளையும் சமமாகவே நடத்துகிறது எனத் தெரிவித்தார்.

முன்னதாக திமுக மகளிரணிச் செயலாளரும், கட்சியின் மாநிலங்களவை குழுத் தலைவருமான கனிமொழி ரயில் பெட்டிகள் குறித்தும், தென்னிந்திய ரயில் சேவைகுறித்தும் எழுத்துபூர்வமாக மட்டுமன்றி ரயில்வே அமைச்சரிடம் நேரடியாகவும் கேள்விகள் எழுப்பியிருந்தார். அதில், ரயில்வேயில் வழக்கமான ரயில் பெட்டிகளுக்கு பதிலாக, இலகுரக எல்.ஹெச்.பி எனப்படும் நவீன ரயில்பெட்டிகள் மீதும் கனிமொழி கேள்வி எழுப்பி இருந்தார்.

எல்.ஹெச்.பி வகை ரயில்பெட்டிகள் விவரம்

இதற்கு எழுத்துபூர்வமாக அமைச்சர் பிரபு அளித்த விரிவான பதிலில் கூறியதாவது: இந்திய ரயில்வேயில் உத்தேசமாக 53 ஆயிரம் பயணிகள் பெட்டிகள் இயக்கப்படுகின்றன. இவற்றில் சுமார் 3,800 ரயில்பெட்டிகள் எல்.ஹெச்.பி வகையிலானவை. மீதமுள்ள சுமார் 49 ஆயிரத்து 200 பெட்டிகள் பழைய முறையில் வடிவமைக்கப்பட்டவையே. எல்.ஹெச்.பி வகை பெட்டிகள் 102 ஜோடி ரயில்களில் பயன்படுத்தப்படுகின்றன. இவற்றில் 55 ஜோடி ரயில்களில் எல்.ஹெச்.பி வகை பெட்டிகள் அறிமுகப்படுத்தப்பட்டன. மீதியுள்ள 47 ஜோடி ரயில்களில் ஏற்கனவே பயன்படுத்தப்பட்ட ‘கன்வென்ஷனல் கோச்’ எனப்படும் பழைய வகை பெட்டிகள் எல்.ஹெச்.பி வகைக்கு மாற்றப்பட்டன. பழைய பெட்டிகளை மாற்றி எல்.ஹெச்.பி பெட்டிகளை கொண்டு வரும் நடைமுறை படிப்படியாக பின்பற்றப்பட்டு வருகிறது. இந்த ஆண்டில் சுமார் 1,600 எல்.ஹெச்.பி பெட்டிகள் புதிதாக பயன்படுத்தப்பட திட்டமிடப்பட்டுள்ளது.

எல்.ஹெச்.பி ரயில் பெட்டிகள் பாதுகாப்பானவை, அதிக வேகம்செல்லும் ஆற்றல் படைத்தவை, அதிக எடை சுமக்கும் வகையிலானவை. ஆக சிறந்த பயண அனுபவத்தைத் தருபவை. எல்.ஹெச்.பி வகை ரயில்பெட்டிகளின் வேகம் படிப்படியாக மேலும் அதிகரிக்கப்படும். இந்திய ரயில்வேயின் அனைத்து ரயில்வே மண்டலங்களிலும் இதுவரை 3800 எல்.ஹெச்.பி வகை பெட்டிகள் பயன்பாட்டில் இருக்கின்றன. தெற்கு ரயில்வேயில் 16 ஜோடி எக்ஸ்பிரஸ் ரயில்களில் 321 பெட்டிகள் எல்.ஹெச்.பி வகையைச் சார்ந்தவை. இவற்றில் 6 ஜோடி எக்ஸ்பிரஸ் ரயில்களில் 112 பெட்டிகள் பராமரிப்புப் பணிகள் செய்யப்பட்டு வருகின்றன. இந்த ரயில்வே பட்ஜெட்டில் தென்னக ரயில்வேக்கு 101 எல்.ஹெச்.பி வகையிலான பெட்டிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x