

சென்னை ஐஐடி மாணவர் சூரஜ் தாக்கப்பட்டதைக் கண்டித்து அம்பேத்கர் பெரியார் வாசகர் வட்டம் சார்பில் மாட்டிறைச்சி உண்ணும் போராட்டம் சென்னைப் பல்கலைக்கழகத்தில் இன்று காலை நடத்தப்பட்டது.
இதில் கலந்துகொண்ட அம்பேத்கர் பெரியார் வாசகர் வட்டத்தினர் கைகளில் மாட்டிறைச்சி தொடர்பான பதாகைகளை ஏந்தியிருந்தனர். அப்போது ’மாட்டுக்கறி உண்ணுவது எங்கள் உரிமை’, ’மாட்டுக்கறி கெட்டது எனில் கோமியம் நல்லதா?’ என்பன உள்ளிட்ட கோஷங்களை எழுப்பினர்.
பாதுகாப்புக்காகவும், வன்முறையைத் தடுக்கவும் சேப்பாக்கத்தில் உள்ள சென்னைப் பல்கலைக்கழகத்தில் போலீஸார் குவிக்கப்பட்டிருந்தனர். வெளியில் இருந்து சமைக்கப்பட்டு, கொண்டு வரப்பட்ட மாட்டிறைச்சி போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் ஒருவருக்கொருவர் ஊட்டி விட்டுக்கொண்டே சாப்பிட்டனர்.
மத்திய அரசின் மாட்டிறைச்சி தடைக்கு எதிரான உத்தரவைக் கண்டித்து நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளில் போராட்டம் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.