திருப்பூரில் வன்முறையைத் தூண்ட சங்பரிவார் அமைப்புகள் சதி: ஜி.ராமகிருஷ்ணன் குற்றச்சாட்டு

திருப்பூரில் வன்முறையைத் தூண்ட சங்பரிவார் அமைப்புகள் சதி: ஜி.ராமகிருஷ்ணன் குற்றச்சாட்டு
Updated on
1 min read

திருப்பூரில் வன்முறையைத் தூண்ட சங்பரிவார் அமைப்புகள் சதி செய்வதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் குற்றம்சாட்டியுள்ளார்.

இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ''திருப்பூரில் கடந்த 27-ம் தேதி பாஜக மாவட்ட துணைத் தலைவர் மாரிமுத்து தூக்கில் தொங்கிய நிலையில் மரணமடைந்திருந்தார். உடனடியாக பாஜக தலைமை இதனை கொலை என கூறியது. தூக்கில் தொங்கிய இடத்துக்கு இருகில் தேசியக் கொடி தலைகீழாக பறக்க விடப்பட்டிருந்தது. பிரதமர் மோடி படத்துக்கு செருப்பு மாலை அணிவகுக்கப்பட்டிருந்தது.

கொலை செய்தவர்கள் அரசியல் ரீதியாகவும், மத ரீதியாகவும் பாஜகவுக்கு எதிரானவர்கள் என்ற தோற்றத்தை இவை ஏற்படுத்தின. இதனால் திருப்பூர் நகரில் பதற்றம் ஏற்படுத்தப்பட்டு கடைகள் அடைக்கப்பட்டன. ஆனால், தற்போது கொடுக்கல் வாங்கல் மற்றும் முறைகேடான பெண் தொடர்பு ஆகியவற்றால் மாரிமுத்து தற்கொலை செய்து கொண்டதாக ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளது.

தனிநபர் விரோதங்கள், தொழில் போட்டிகள், தவறான தொடர்புகளால் நடக்கும் கொலைகளுக்கு சங்பரிவார் அமைப்புகள் மத, அரசியல் சாயம் பூசி வன்முறையில் ஈடுபடுவதும் வழக்கமாகியுள்ளது. கலவரங்களைத் தூண்டுவதன் மூலம் அரசியல் வளர்ச்சி பெறுவது என்ற அவர்களின் நாடு தழுவிய உத்தியை தமிழகத்திலும் பயன்படுத்துகிறார்கள் என்பது கவலை அளிக்கிறது.

எனவே, திருப்பூரில் தேசியக் கொடியை தலைகீழாக பறக்க விட்டவர்கள், செருப்பு மாலை அணிவித்தவர்களை கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். திருப்பூரில் வன்முறையைத் தூண்டும் சங்பரிவார் அமைப்புகளின் சூழ்ச்சியை முறியடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்று ஜி.ராமகிருஷ்ணன் கூறியுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in