

பெட்ரோல், டீசல் விலை உயர்வை தடுக்க கலால் வரி உயர்வை திரும்பப் பெற வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்ட அறிக்கையில், ''கடந்த 100 நாட்களில் அறிவிக்கப்பட்டுள்ள ஏழாவது முறையாக பெட்ரோல் டீசல் விலை உயர்த்தப்பட்டுள்ளது. எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ள விலை உயர்வின் காரணமாக சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 11 காசுகள் அதிகரித்து ரூ.65.15 என்றும், டீசல் விலை ரூ.1.34 அதிகரித்து ரூ.56.78 என்றும் உள்ளது. உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை நிலவரத்துக்கு ஏற்ப தான் இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை நிர்ணயிக்கப்படுவதாக மத்திய அரசு கூறுகிறது. ஆனால், கடந்த 15 நாட்களில் உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை அதிகரிக்கவில்லை.
கடந்த மே மாதம் 31 ஆம் தேதியுடன் முடிவடைந்த 15 நாட்களில் கச்சா எண்ணெயின் சராசரி விலை 46.53 டாலராக இருந்தது. ஜூன் 15 ஆம் தேதியுடன் முடிவடைந்த 15 நாட்களில் கச்சா எண்ணெயின் சராசரி விலை 46.52 டாலராக உள்ளது. ஒப்பீட்டளவில் கடந்த 15 நாட்களில் கச்சா எண்ணெய் விலை 0.01 டாலர் குறைந்துள்ளது. ஆனால், அதற்கு மாறாக பெட்ரோல், டீசல் விலையை உயர்த்துவது எந்த வகையிலும் சரியல்ல.
கலால் வரியை ஓரளவு குறைப்பதன் மூலம் இந்த விலை உயர்வை மத்திய அரசு தவிர்த்திருக்கலாம். கச்சா எண்ணெய் விலை பழையபடி உயர்ந்தால் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.200ஐ தாண்டிவிடும். எனவே, பெட்ரோல், டீசல் விலைகளை முந்தைய நிலைக்கே குறைவதற்கு வசதியாக கடந்த சில ஆண்டுகளில் உயர்த்தப்பட்ட கலால் வரி உயர்வை மத்திய அரசு திரும்பப் பெறவேண்டும்'' என்று ராமதாஸ் கூறியுள்ளார்.