

காஞ்சிபுரம் மாவட்டம் கல் பாக்கத்தில் அணுமின் நிலையம் அமைந்திருக்கும் பகுதிக்கு அருகே, கடலுக்குள் எரிமலை இருக்கிறதா? என்பதை ஆய்வு செய்ய ரூ.12 லட்சத்தை ஒதுக்கீடு செய்திருப்பதாக சமீபத்தில் சென்னை உயர் நீதிமன்றத்தில் அணுமின் நிலையம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கல்பாக்கம் கடல் பகுதியில் எரிமலை இருப்பதாக சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் சில மாதங்களுக்கு முன் பரபரப்பான தகவலை வெளியிட்டனர். மேலும், சர்வதேச அணுசக்தி முகமையின் வரைபடத்திலும் கல்பாக்கம் பகுதியில் எரிமலை இருப்பதற்கான சான்றுகள் இருப்பதால், இது தொடர்பாக ஆய்வுகளை நடத்த வேண்டும் என்று கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன.
சுற்றுச்சூழல் ஆர்வலர்களால் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் அணுசக்தி கட்டுப்பாட்டு வாரியத்திடமிருந்து பெறப்பட்ட தகவலில் எரிமலை இருப்பதற்கான வாய்ப்புகள் இருப்பதாகத் தெரி விக்கப்பட்டது. ஆனால் தேசிய கடலியல் நிறுவனம், இந்திய புவியியல் ஆய்வு நிறுவனம் போன்ற சில அமைப்புகள் கல்பாக்கத்தில் எரிமலை இருப்பதற்கான வாய்ப்புகள் இல்லை என்று தெரிவித்திருந்தன.
இந்நிலையில், கல்பாக்கம் கடலில் எரிமலை உள்ளதா? என்பதை ஆய்வு செய்ய அணுமின் நிலையம் ரூ.12,08,000-ஐ கடந்த ஜூன் மாதம் 25ம் தேதி ஐதராபாத்தில் உள்ள தேசிய புவியியற்பியல் ஆராய்ச்சி நிறுவனத்துக்கு ஒதுக்கீடு செய்துள்ளதாக உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் தெரிவித்தி ருப்பது பரபரப்பை ஏற்படுத்தி யுள்ளது. இது தொடர்பாக கல்பாக்கம் அணுமின் நிலையத்தினர் 'தி இந்து' நிருபரிடம் கூறியதாவது:
கல்பாக்கம் கடல் பகுதியில் எரிமலை இல்லை என்று பல்வேறு அமைப்புகள் தெரிவித்திருக்கின்றன. எனினும், இங்கு எரிமலை இருப்பதாக வதந்திகள் பரப்பப்பட்டு வருகின்றன. வதந்திதான் என்றபோதும் அது மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. எனவே, மக்களின் அச்சத்தைப் போக்குவதற்கும், அணுமின் நிலையத்தின் பாதுகாப்பை மேலும் உறுதி செய்யவும் நாங்கள் ரூ.12 லட்சத்தை ஐதராபாத்தில் உள்ள தேசிய நிறுவனத்துக்கு ஒதுக்கீடு செய்துள்ளோம். அந்த ஆய்வு தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கிறது என்றனர்.