

போலி வழக்கறிஞர்களை ஒழிக்க பார் கவுன்சில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உச்சநீதிமன்ற நீதிபதி எஃப்.எம்.இப்ராஹிம் கலிஃபுல்லா கூறியுள்ளார்.
சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில், 10 ஆயிரம் சதுர அடிப்பரப்பில் சுமார் 3 கோடி ரூபாய் செலவில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. அதன் திறப்பு விழா நேற்று நடைபெற்றது. உச்சநீதிமன்ற நீதிபதி இப்ராஹிம் கலிஃபுல்லா இதில் கலந்துகொண்டு கட்டிடத்தை திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:
இன்று சட்டக் கல்லூரிகளில் கற்றல் மற்றும் கற்பித்தல் முறை மோசமாக உள்ளது. மேலும் தற்போது போலி சட்டக் கல்லூரிகள் செயல்படுகின்றன. போலி வழக்கறிஞர் பட்டங்கள் கிடைக்கின்றன. இந்த விவகாரத்தில் பார் கவுன்சில் விழிப்புடன் இருக்கவேண்டும். போலி வழக்கறிஞர்களை ஒழிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இளம் வழக்கறிஞர்களுக்கு உலகத் தரம் வாய்ந்த பயிற்சி களை வழங்க பார் கவுன்சில் நடவடிக்கை எடுக்க வேண்டும். வழக்கறிஞர்களின் பிரச்சினை களைத் தீர்க்க தனி கமிட்டி அமைக்க வேண்டும். அதை விடுத்து வழக்கறிஞர்கள், தங்கள் பிரச்சினைகளுக்காக நீதிமன்ற புறக்கணிப்பில் ஈடுபடுவதை தவிர்க்க வேண்டும். வழக்கறிஞர் களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு, அவர்களுக்கான மருத்துவக் காப்பீடு, குடும்ப ஓய்வூதிய திட்டம் உள்ளிட்டவற்றை பெற பார் கவுன்சில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
உச்சநீதிமன்ற நீதிபதி சி.நாகப் பன் இந்நிகழ்ச்சியில் பேசும்போது, “பார் கவுன்சில் சமூக நல சங்கம் போன்று, ஏழைகளுக்கு சட்ட உதவிகளை வழங்கி சமூக மாற்றத்தை கொண்டுவர வேண்டும். சட்டத் தொழில் என்றும் மக்கள் நலன் சார்ந்ததாக இருக்க வேண்டும்” என்றார்.
உச்சநீதிமன்ற நீதிபதி ஆர்.பானுமதி பேசும்போது, “வழக்கறி ஞர்களுக்கு தங்கள் தொழிலில் சிறந்த உலகளாவிய கண்ணோட் டம் அவசியம். வழக்கறிஞர்கள் அனைவரும் உலகத் தரத்திலும், தற்போது வளர்ந்துள்ள தொழில்நுட்பத்துக்கும் ஏற்ப தங்கள் தொழில் சார்ந்த திறமைகளை வளர்த்துக்கொள்ள வேண்டும்” என்றார்.
சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சய் கிசான் கவுல் பேசும்போது, “சட்டக் கல்லூரிகளின் கற்பித்தல் கட்டமைப்புகளை பார் கவுன்சில் அடிக்கடி சோதித்து, தரமான சட்டக் கல்வியை உறுதி செய்ய வேண்டும். இளம் வழக்கறிஞர்களுக்கு செயல்முறை பயிற்சிகளை மூத்த வழக்கறிஞர்கள் மூலம் வழங்க பார் கவுன்சில் ஏற்பாடு செய்ய வேண்டும்” என்றார்.
தமிழ்நாடு பார் கவுன்சில் தலைவர் டி.செல்வம், துணைத் தலைவர் பி.எஸ்.அமல்ராஜ் உட்பட பலர் இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.