Published : 04 Mar 2017 08:34 AM
Last Updated : 04 Mar 2017 08:34 AM

ஈஷா மையம் மீது தொடரப்பட்ட வழக்கில் மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு

கோவை வெள்ளியங்கிரி மலைப் பகுதியில் ஈஷா மையம் சார்பில் சட்டவிரோதமாக கட்டுமானங்கள் கட்டப்பட்டு வருவதை தடை செய்ய வேண்டும் எனக் கோரி தொடரப்பட்ட வழக்கில் மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவிட்டுள்ள உயர் நீதிமன்றம், விசாரணையை வரும் ஏப். 10-ம் தேதிக்கு தள்ளிவைத்துள்ளது.

வெள்ளியங்கிரி மலைவாழ் பழங்குடியினர் பாதுகாப்பு சங்கத் தின் தலைவரான முத்தம்மாள், சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், ‘‘ஈஷா யோகா மையம் சார்பில் வெள்ளியங்கிரி மலையில் 112 அடி ஆதியோகி சிவன் சிலை அமைப்பதற்காக வனப்பகுதியில் நிலம் சட்டவிரோதமாக ஆக்கிர மிக்கப்பட்டுள்ளது. அந்த நிலத்தில் எவ்வித அனுமதியுமின்றி கட்டு மானங்கள் கட்டப்படுகின்றன. எனவே புதிதாக கட்டுமானங்கள் கட்டுவதற்கு தடை விதிக்க வேண் டும். அத்துடன், ஏற்கெனவே அத்து மீறி கட்டப்பட்டுள்ள கட்டிடங்களை இடிக்க உத்தரவிட வேண்டும்’’ என அதில் கோரியிருந்தார்.

இம்மனுவுக்கு கோவை மண்டல நகரமைப்பு திட்டமிடல் துறை துணை இயக்குநர் (பொறுப்பு) ஆர்.செல்வராஜ் தாக்கல் செய்த பதில் மனுவில், ‘‘ஈஷா மையம் சார்பில் அத்துமீறி 109 ஏக்கர் நிலத்தில் அங்கீகாரம் இல்லாத கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளன. கட்டுமானங்களை நிறுத்துவதற் கும், சீல் வைப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது’’ என கூறியிருந்தார்.

இந்நிலையில், இந்த வழக்கு விசாரணை நேற்று தலைமை நீதிபதி (பொறுப்பு) ஹூலுவாடி ஜி.ரமேஷ் மற்றும் நீதிபதி ஆர்.மகாதேவன் ஆகியோர் அடங்கிய அமர்வில் நடந்தது. அப்போது நீதிபதிகள், “இந்த மனுவுக்கு இதுவரை ஒரு துறை மட்டுமே பதில் மனு தாக்கல் செய்துள்ளது. வனத்துறை, கோவை மாவட்ட ஆட்சியர், தமிழக அரசின் பிற துறைகள் மற்றும் ஈஷா மையம் ஆகியவை இன்னும் பதிலளிக்கவில்லை. எனவே ஈஷா மையம் உள்ளிட்ட பிற எதிர்மனுதாரர்களும் பதிலளிக்கும் வகையில் விசாரணையை வரும் ஏப்ரல் 10-க்கு தள்ளி வைக்கிறோம். அதற்குள் மத்திய, மாநில அரசுகள் சார்பிலும் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும்” என உத்தரவிட்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x